துணை மருத்துவப் படிப்பு: விண்ணப்ப விற்பனை துவங்கியது
கோவை: கோவை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான 343 விண்ணப்பங்கள் நேற்று விற்பனையானது. மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளான பி.எஸ்.சி. (நர்சிங்), பி.பாம்., பி.ஏ.எஸ்.எல்.பி.,(செவித்திறன், பேச்சு மற்றும் மொழி நோய்க் குறியியல்), பி.எஸ்.சி. ரேடியாலஜி, உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பம் நேற்று முதல் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் நேற்று காலை 10.00 மணி முதல் விண்ணப்ப வினியோகம் துவங்கியது. கோவை மருத்துவக் கல்லூரியில் காலை 10.00 மணிக்கு துவங்கிய விண்ணப்ப வினியோகம் மாலை 5.00 மணி வரை நடந்தது. கல்லூரிக்கு 1,200 விண்ணப்பங்கள் வந்தன. முதல் நாளான நேற்று பொதுப்பிரிவில் 238, எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் 105 என மொத்தம் 343 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. விண்ணப்ப கட்டணம் 350 ரூபாய்க்கான டி.டி.யை வழங்கி விண்ணப்பத்தை பெற்றுச் சென்றனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 19ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.