வனக்கல்லூரி மாணவர்களுடன் பேசவுள்ளனர் அமைச்சர்கள் அடங்கிய குழுவினர்
சென்னை : கோவை, மேட்டுப்பாளையத்தில், வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் வனவியல் பட்டதாரிகளை, வனச்சரகர் பணிக்கு தேர்வு செய்ய வேண்டும். இதற்காக, அரசின் புதிய அரசாணையை மாற்றம் செய்து, 100 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இக்கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த, 10 நாட்களாக, மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ரத்தத்தில் கோரிக்கை எழுதி வைத்தல், மண்சோறு சாப்பிடும் போராட்டம் ஆகியவை நடத்தப்பட்டன. இது தொடர்பாக, இ.கம்யூ.,வின் வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ., ஆறுமுகம், சட்டசபையில் நேற்று கேள்வி எழுப்பினார். இதற்கு, வேளாண்துறை அமைச்சர் கிருஷ்ணமூர்த்தி, &'&'வனக்கல்லூரி மாணவர்கள் கோரிக்கை குறித்து பேச்சு நடத்த, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி நான், வனத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், பேச்சு நடத்துகிறோம். இப்பிரச்னைக்கு சுமுக தீர்வு காணப்படும்,&'&' என்றார்.