மாணவர்களின் தற்கொலையை தடுக்குமாறு வல்லுநர் குழுவுக்கு அறிவுறுத்தல்
சென்னை: கல்லூரி மாணவர்களின் தற்கொலைகளுக்கு, அவர்களால் தொடர்ந்து படிக்க முடியாமல் ஏற்படும் மன உளைச்சல்தான் கராணம். அதுவும் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள்தான் தற்கொலை முடிவை எடுக்கின்றனர் என, சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. தனிக்குழு: புதுச்சேரியில் அதிகரித்து வரும் மாணவர்கள் தற்கொலை தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாணவர்களுக்கு, மனஅளவில் ஊக்கம் அளிக்க வல்லுனர்கள் கொண்ட தனிக்குழு தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. புதுச்சேரியில் கல்லூரி மாணவர் தற்கொலைகள் அதிகரித்து வருவது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு ஒன்றை எடுத்துக் கொண்டது. இதுதொடர்பாக மனு செய்யும்படி புதுச்சேரி தலைமை செயலருக்கு உத்தரவிட்டது. இம்மனுவை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி சத்யநாராயணா கொண்ட முதல் பெஞ்ச் விசாரித்து அளித்த உத்தரவு: தனியார் தொழிற்கல்வி நிலையங்களில் அதிகரித்து வரும் மாணவர் தற்கொலை குறித்து ஆய்வுசெய்ய சமூகம், பொருளாதாரம், மனோதத்துவம், மருத்துவம் மற்றும் சட்டத் துறைகளைச் சேர்ந்த வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, மாணவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம் நீங்க, மனோதத்துவம் மற்றும் மருத்துவரீதியான ஆலோசனைகள் வழங்க வேண்டும் என கூறியுள்ளது. திறனில்லை: அண்மை காலத்தில் 41 மாணவர்கள் இறந்துள்ளனர். இவர்களில் 10 பேர் நோயுற்றும், 13 பேர் விபத்திலும் இறந்துள்ளனர். 19 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். உயர் கல்வியில் அவர்களால் தொடர்ந்து படிக்க முடியாததுதான் காரணம் என தெரிகிறது. உயர் கல்வியில் சேர, மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடக்கிறது. அதிக மதிப்பெண் பெற்றவர்கள், அரசின் கட்டண சலுகையில் உயர் கல்வியில் சேர்கின்றனர். அதேநேரத்தில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள், நிர்வாக ஒதுக்கீட்டில் உயர் கல்வியில் சேர்கின்றனர். இரு தரப்பினரும் ஒரு வகுப்பில்தான் பயில்கின்றனர். இந்நிலையில் குறைந்த மதிப்பெண் பெற்று, நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களால், உயர்கல்வி பாடத் திட்டத்தை தொடர்ந்து படிக்கும் அளவுக்கு அவர்களிடம் போதிய திறனும் இருப்பதில்லை. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலைக்கு செல்கின்றனர் என குழு அறிக்கை கூறுகிறது. தொடர் கண்காணிப்பு: தேசிய அளவில், ஓராண்டில், ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு, 11 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால், இந்த சராசரியைத் தாண்டி, புதுச்சேரியில் 35.6 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். எனவே இளைஞர்கள் தற்கொலையைத் தடுக்க தொடர் கண்காணிப்பு அவசியமாகிறது. குறிப்பாக வல்லுனர்கள் குழு தொடர்ந்து இப்பணியில் ஈடுபட வேண்டும். இத்துடன் இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளனர்.