இருக்கும் கழிப்பறைகளைகூட காப்பாற்ற முடியவில்லை: ஆசிரியர்கள் புலம்பல்
மதுரை: மதுரை மாவட்டத்தில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லாத நிலையில், இருக்கும் கழிப்பறைகளைகூட காப்பாற்ற முடியவில்லை என ஆசிரியர்கள் புலம்புகின்றனர். அனைவருக்கும் கல்வி திட்டம், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம், நமக்கு நாமே மற்றும் உள்ளூர் திட்டங்கள் மூலம் கழிப்பறைகள் வசதிகள் செய்யப்படுகின்றன. ஆனாலும் குறைந்தபட்சம் 200 மாணவர்களுக்கு ஓர் யூனிட் (2 கோப்பைகள், 10 யூரினல்) என்ற அடிப்படை தேவை இன்னும் பல அரசு பள்ளிகளில் பூர்த்தியாகவில்லை. அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிப்பறை வசதி கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்ட பின் எப்படியாவது அந்த உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்கின்றனர். ஆனால் சுற்றுச்சுவர், இரவு காவலாளி உட்பட அடிப்படை வசதி இல்லாததால் நல்ல நிலையிலுள்ள கழிப்பறைகள் சேதப்படுத்தப்படும் சம்பவங்கள் ஆசிரியர்களுக்கு தலைவலியை ஏற்படுத்துகின்றன. அவர்கள் கூறியதாவது: பொதுவாக 90 சதவீதம் அரசு பள்ளிகளில் சுற்றுச்சுவர் வசதி இல்லை. இரவு காவலர் பணியிடம் காலியாக உள்ளது. துப்புரவு பணியாளர் பல ஆண்டுகளாக நியமிக்கப்படவில்லை. கழிப்பறை வசதி இருந்தாலும் பராமரிக்க ஆட்கள் இல்லை. இரவில் மர்ம நபர்கள் பள்ளிகளை மது அருந்தும் பார்களாக பயன்படுத்துகின்றனர். இப்பிரச்னைகளில் அதிகாரிகள் கவனம் செலுத்தி கழிப்பறைகளை பாதுகாக்க வேண்டும், என்றனர்.