உள்ளூர் செய்திகள்

கற்றல் திறனே, மற்ற அனைத்து திறன்களையும் வளர்க்கும்

சென்னை: கற்றல் திறனே, மற்ற அனைத்து திறன்களையும் வளர்க்கும் என, எம்.எஸ்.எம்.ஈ.,யின், தமிழக அரசு செயலர் குமார் ஜெயந்த் பேசினார். சென்னை பல்கலையின், மேலாண்மை துறை சார்பில் நடந்த, மனிதவள இணைவு -14 என்ற கருத்தரங்கில், எம்.எஸ்.எம்.ஈ.,யின் தமிழக அரசு செயலர் குமார் ஜெயந்த் பேசியதாவது: மேலாண்மை திறனை, அனைவரும் வளர்த்து கொள்ள வேண்டும். இன்றைய, பெரு நிறுவனங்களின், மனித வளத்துறை உள்ளிட்ட மேலாண்மை துறைகளில், சிறந்தவர்களாக விளங்க, அங்குள்ள சவால்களை எதிர்கொள்ள வேண்டும். நிறைய நுால்களை... சவால்களை எதிர்கொள்ள வேண்டுமானால், பாடப்புத்தகங்களையும் தாண்டி, நிறைய நுால்களை படிக்க வேண்டும். தொடர்ந்து கற்பது தான், மற்ற திறன்களை வளர்த்துக் கொள்ள பேருதவியாக இருக்கும். ஒரு நல்ல வேலை, பிற மாநிலத்தில் கிடைத்தால், போக மறுக்கக்கூடாது. அவ்வாறு மறுப்பது, சிந்தனை வளத்தை சுருக்கும். எனவே, வேறு மாநிலங்களில் பணி செய்யும் மனநிலையை, முதலிலேயே வளர்த்துக் கொள்ள வேண்டும். நேரம் கிடைக்கும் போதெல்லாம், படிக்கும் காலத்திலேயே, வெவ்வேறு இடங்களுக்கு சென்று, அங்குள்ள சூழலியல் காரணிகளை அறிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விடுதி ஏற்பாடு கருத்தரங்கில், சென்னை பல்கலை துணைவேந்தர், தாண்டவன் பேசியதாவது: சென்னை பல்கலையின், மேலாண்மை சார்ந்த கல்வி குழுவில், பெரு நிறுவனத்தை சார்ந்தவர்களுக்கு வாய்ப்பளித்திருக்கிறோம். அதனால், பெரு நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப பாடத்திட்டங்களை, மாற்றி அமைக்க முடிகிறது. கோவையில் நடக்கும், ஒற்றை சாளர தெரிவில், சென்னை பல்கலையும் இணைந்துள்ளதால், கல்வியில் மிகச்சிறந்த மாணவர்களாக திகழ்பவர்கள், சென்னை பல்கலையை தேர்ந்தெடுக்கும் நிலையை உருவாக்கி இருக்கிறோம். கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட மாணவர்களுக்கு, விடுதி ஏற்பாடும் செய்து கொடுத்துள்ளோம். இந்த மாதிரியான முயற்சிகளை, தொடர்ந்து சென்னை பல்கலை செய்து வருவதால், மிகச்சிறந்த பெரு நிறுவனங்களில், பெரிய பதவிகளில், சென்னை பல்கலையின் மேலாண்மை துறை மாணவர்கள் தேர்வாகின்றனர். பெரு நிறுவனங்களுடன், சென்னை பல்கலை தொடர்ந்து கைகோர்த்து, நல்ல மேலாண்மையாளர்களை உருவாக்கும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்