பயங்கரவாதிகளின் புனிதப்போர் கொள்கை போதிப்பு?; கண்காணிப்பில் மதரசாக்கள்
குர்கான்: ”நாட்டில் உள்ள சில மதரசாக்களில், அன்னிய நாடுகளில் இருந்து வந்துள்ள ஆசிரியர்கள் பாடம் நடத்துவதாகவும், அவர்கள் பயங்கரவாதிகளின் புனிதப்போர் கொள்கையை போதிப்பதாகவும், தகவல்கள் கிடைத்துள்ளன. அதனால், சில மதரசாக்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகின்றன,” என, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். வங்கதேச ஆசிரியர்கள்: அரியானா மாநிலம் குர்கானில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், மேலும் கூறியதாவது: மேற்குவங்கத்தில் உள்ள சில மதரசாக்களில், வங்கதேசத்தை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் நடத்துவதாகவும், அந்த ஆசிரியர்கள் எல்லாம், தடை செய்யப்பட்ட ஜமாத் - உல் - முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல் கிடைத்துள்ளது. மேலும், மாணவர்களுக்கு அந்த ஆசிரியர்கள், பயங்கரவாதிகளின் புனிதப்போர் பற்றி போதித்து வருவதாகவும் கூறப்படுகிறது. பாதுகாப்பு நிறுவனங்கள், மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்துள்ள அறிக்கையிலும், இந்த தகவல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. தீவிர கண்காணிப்பு: அதேநேரத்தில், இந்திய ஆசிரியர்களைக் கொண்டுள்ள மதரசாக்களில், பிரிவினைவாத நடவடிக்கைகள் மற்றும் புனிதப்போர் பற்றி போதிக்கப்படுவதில்லை என, தெரியவந்து உள்ளது. எனவே, சந்தேகத்திற்குரிய மதரசாக்களை, மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. இவ்வாறு, அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.