சித்தா படிப்பில் முதலிடம் பெற்ற ஜப்பான் மாணவி!
திருவனந்தபுரம்: ஜப்பான் மாணவி ஒருவர், இந்தியாவின் பாரம்பரிய சித்தா மருத்துவக் கல்வியில், முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். ஜப்பானின் யோகோஹமா நகரைச் சேர்ந்த, சைட்டோ என்பவர், பண்டைய மூலிகை மருத்துவ மான சித்தா குறித்து, வலைதளத்தில் தகவல் அறிந்தார். உடனே, அக்கல்வியை கற்க விரும்பி, கேரள பல்கலையின் கீழ் இயங்கும், சாந்திகிரி சித்தா மருத்துவ கல்லுாரியில் சேர்ந்தார். சித்தா மீது கொண்ட தணியாத ஆர்வத்தால், அவருக்கு இந்திய மொழி, கலாசாரம் போன்றவை தடையாக இல்லை. தமிழில் தான், சித்தா நுால்கள் அதிகம் உள்ளன என்பதால், அவர், தமிழ்மொழியை தீவிரமாக கற்கத் துவங்கினார். இறுதித் தேர்வில், அனைத்து பாடப்பிரிவிலும் சிறந்த மதிப்பெண்கள் பெற்று, பட்டத் தேர்வில் முதலிடம் பெற்றார். அவருடன், மேலும் பல மாணவர்கள், சித்தா மருத்துவர் பட்டம் பெற்றனர். ஆர்வம் இருந்தால், எந்த தடையையும் வெல்லலாம் என்று கூறும் சைட்டோ, தாய்நாடு திரும்பி, சித்தா மருத்துவ சேவையில் ஈடுபட உள்ளதாக கூறினார்.