கல்லுாரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டியில் புதிய சாதனைகள்!
கோவை: கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்த கல்லுாரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டியில், புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. பாரதியார் பல்கலையின் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள், கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்தன. பல்வேறு கல்லுாரிகளின் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 10 ஆயிரம் மீ., மாணவர் பிரிவில், என்.ஜி.பி., கல்லுாரியின் ஷாகிர் அலி, தங்கவேல் முருகன், பி.எஸ்.ஜி., கல்லுாரியின் கோபகுமார்; மாணவியர் பிரிவில், கோபி கலைக் கல்லுாரியின் பூங்கொடி, வசந்தாமணி, என்.ஜி.பி., கல்லுாரியின் வித்யா வெற்றி பெற்றனர். மாணவர்களுக்கான நீளம் தாண்டுதலில், பி.எஸ்.ஜி., கல்லுாரியின் முகமது சலாவுதீன், என்.ஜி.பி., கல்லுாரியின் லக் ஷ்மண், பொள்ளாச்சி ஸ்ரீ தியாகராஜா கல்லுாரியின் பாரதிராஜ், மாணவியருக்கான போட்டியில், பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கல்லுாரியின் சிவ அன்பரசி, நிர்மலா கல்லுாரியின் மோனிஷா, பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கல்லுாரியின் சுகித்தா, முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர். மாணவர்களுக்கான, 200 மீ.,ல், தியாகராஜா கல்லுாரியின் தீபன் சக்கரவர்த்தி, 21 வினாடி 03 நொடிகளில் புதிய சாதனை படைத்தார். ஜி.ஆர்.டி., கல்லுாரியின் எவின் வினால்டோ, என்.ஜி.பி., கல்லுாரியின் அருள் பிரகாஷ், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்தனர். மகளிருக்கான போட்டியில், என்.ஜி.பி., கல்லுாரியின் சுனிதா, நிர்மலா கல்லுாரியின் மோகனா, மஞ்சுஸ்ரீ வெற்றி பெற்றனர். ஆண்களுக்கான 4*400 மீ., தொடர் ஓட்டத்தில், பொள்ளாச்சி தியாகராஜா கல்லுாரி, 3 நிமிடங்கள் 22 வினாடிகளில் முதல் இடத்தை பிடித்து புதிய சாதனை படைத்தது. பி.எஸ்.ஜி., கலைக் கல்லுாரி, ஸ்ரீ கிருஷ்ணா கல்லுாரி, இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்தன. மாணவியருக்கான போட்டியில், பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள், நிர்மலா கல்லுாரி, என்.ஜி.பி., கல்லுாரி ஆகியவை வெற்றி பெற்றன. மாணவர்களுக்கான 400 மீ., தடை ஓட்டத்தில், என்.ஜி.பி., கல்லுாரியின் தருண் 53 வினாடி 05 நொடிகளில் முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்தார். ஸ்ரீ தியாகராஜா கல்லுாரியின் பார்த்திபன், ஸ்ரீ கிருஷ்ணா கல்லுாரியின் பாலாஜி, மகளிருக்கான போட்டியில், பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கல்லுாரியின் இனியா, நிர்மலா கல்லுாரியின் சத்யா, வினோஷா வெற்றி பெற்றனர்.