பள்ளிக் கட்டணம் செலுத்தாத மாணவனை கொன்ற கொடூரம்
பரேலி: உத்தர பிரதேசத்தின் பரேலி நகரில், பள்ளிக்கட்டணம் கட்டாத நர்சரி பள்ளி மாணவனை, தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் அடித்து கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. சிறு குழந்தை என்றும் பாராமல், குழந்தையின் தலையை சுவரில் அடித்துள்ளார். இதில், அந்த இடத்திலேயே குழந்தை இறந்தது. அருகில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கிச் சென்று போட்டுவிட்டு, தலைமை ஆசிரியர் தலைமறைவாகி விட்டார். இந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்த குழந்தையின் பெற்றோர் மிகவும் ஏழ்மையானவர்கள்; குறிப்பிட்ட காலத்தில் கட்டணத்தை செலுத்த முடியாததால், தங்கள் அருமை குழந்தையை இழந்துள்ளனர். தப்பி ஓடி, தலைமறைவாகியுள்ள பள்ளி தலைமை ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.