உயர்கல்வியில் சேர முடியாமல் கல்லூரி மாணவர்கள் தவிப்பு
சென்னை: பருவத்தேர்வு முடிவு வெளியாகி பல மாதங்களாகியும், புரவிஷனல் சான்றிதழ் வழங்காமல், அரசு கல்லுாரி நிர்வாகங்கள் அலட்சியமாக உள்ளன. கல்லுாரிகளுக்கான பருவத்தேர்வு, கடந்த, ஏப்ரலில் நடந்தது; தேர்வு முடிவு, மே இறுதியில் வெளியானது. தேர்வு முடிவுகள் வெளியானதும், கல்லுாரிகள் மூலம் மாணவ, மாணவியருக்கு மாற்றுச்சான்றிதழ், படிப்பு நிறைவு சான்றிதழ் வழங்கப்படும். இரண்டு சான்றிதழ்களும் இருந்தால், ஒரு சில உயர்கல்வி வகுப்புக்கும், பணிகளுக்கும் செல்ல முடியும். ஆனால், ஆராய்ச்சி படிப்பு போன்ற சில உயர்கல்விக்கு, முந்தைய பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் சான்றிதழ், &'புரவிஷனல்&' சான்றிதழ் அவசியம் தேவை. புரவிஷனல் சான்றிதழ், பல்கலையில் இருந்து கல்லுாரிகளுக்கு அனுப்பப்பட்டு, மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும். தற்போது, கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், ஏப்ரல் இறுதியில் பருவத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு, புரவிஷனல் சான்றிதழ் வழங்கப்படவில்லை. அரசு கல்லுாரிகளில் மட்டும் இந்த நிலை; தனியார் கல்லுாரிகளில் மாணவ, மாணவியருக்கு புரவிஷனல் சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்டது. பல்கலை ஊழியர் ஒருவர் கூறியதாவது: பருவத்தேர்வு முடிந்ததும், தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் பெயர் பட்டியல், கல்லுாரிகளில் இருந்து பல்கலைக்கு அனுப்பப்படும். அந்த பெயர் பட்டியலை வைத்து, புரவிஷனல் சான்றிதழ் தயார் செய்யப்படும். அவற்றை, கல்லுாரி நிர்வாகம், அவர்களது ஊழியர்கள் மூலம் பெற்று, மாணவ, மாணவியருக்கு வினியோகிக்கும். அதில், தனியார் கல்லுாரிகள், சான்றிதழ்களை விரைந்து பெற்றுக் கொள்கின்றன. அரசு கல்லுாரிகள் தாமதமாக பெறுவதால், அக்கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, உரிய நேரத்தில் சான்றிதழ் கிடைப்பதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.