மாணவ, மாணவியர் மீது மலர் தூவிய விமானம்
சென்னை: உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு,பேரணி சென்ற கல்லுாரி மாணவ, மாணவியர் மீது சிறிய ரக விமானத்தில் இருந்து மலர் துாவப்பட்டது. உலக சுற்றுலா தினம், செப்., 27ல் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, நுாறு கோடி சுற்றுலா பயணிகள்; நுாறு கோடி வாய்ப்புகள் என்ற கருப்பொருளாக கொண்டு, சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. தமிழக சுற்றுலாத்துறை சார்பில், உலக சுற்றுலா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை மெரீனாவில், கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்ற சுற்றுலா விழிப்புணர்வு பேரணி நடந்தது. இப்பேரணி, மெரீனா கடற்கரை சாலையில், காந்தி சிலை, விவேகானந்தர் இல்லம் உள்ளிட்ட இடங்கள் வழியாக சென்றது. மெட்ராஸ் பிளையிங் கிளப் சார்பில், சிறிய ரக விமானம் மூலம் பேரணியில் பங்கேற்போர் மீது மலர் துாவி மகிழ்வித்தது. முன்னதாக, பேரணியை சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி, கொடி அசைத்து துவக்கி வைத்தார். எம்.பி., ஜெயவர்தன், சுற்றுலா துறை ஆணையர் ஹர்சகாய் மீனா, கலெக்டர் சுந்தரவள்ளி கலந்து கொண்டனர்.