உயர்கல்வியில் இடஒதுக்கீடு ரத்து; சுப்ரீம் கோர்ட் யோசனை
புதுடில்லி: தேசிய நலனை கருத்தில் கொண்டு உயர் கல்வி துறையில் இடஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டு, தகுதி அடிப்படையில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் யோசனை வழங்கி உள்ளது. உயர்கல்வியில் இடஒதுக்கீட்டு முறையை கொண்டு வர அனுமதி அளிக்குமாறு ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் போன்ற மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தன. இந்த மனுவை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பி.சி.பந்த் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அப்போது கருத்து தெரிவித்த சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், சுதந்திரத்திற்கு பிறகு இடஒதுக்கீட்டு முறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தேசிய நலனை கருத்தில் கொண்டு உயர் கல்வி தரத்தை உயர்த்துவதற்காக இடஒதுக்கீட்டு முறையை நீக்கி விட்டு, தகுதி அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். தகுதி மீது இடஒதுக்கீடு ஆதிக்கம் செலுத்துகிறது. தேச நலனை கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் தாமதமின்றி, எவ்வித வழிகாட்டுதலும் இன்றி நல்லதொரு முடிவை மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுக்கும் என நம்புகிறோம். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஜனாதிபதி உத்தரவு இருப்பதால் அதற்கு எதிராக உத்தரவிட முடியாது. அதே சமயம் தமிழகத்தில் உயர்கல்வியில் இடஒதுக்கீட்டு முறை கொண்டு வருவதற்கு அனுமதி கோரும் மனு மீதான விசாரணை நவம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.