பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு அரிய வாய்ப்பு!
திருப்பூர்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கான, தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, திருப்பூர் தாராபுரம் ரோடு, வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் இன்று நடக்கிறது; பிளஸ் 2 மாணவர்களுக்கான நிகழ்ச்சி, நாளை நடக்கிறது. பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வேண்டும் என்ற அக்கறையுடன், ஆண்டு தோறும், டி.வி.ஆர்., அகாடமி சார்பில், தினமலர் கல்வி மலர் ஜெயித்துக் காட்டுவோம் ஆலோசனை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கல்வி வல்லுனர்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சியில், தேர்வை பயமின்றி எதிர்கொள்வது குறித்தும், அதிக மதிப்பெண் பெறும் வகையில், மாணவ மாணவியர் தங்களை தயார்படுத்திக் கொள்வது குறித்தும், டிப்ஸ் வழங்கப்படும். தேர்வில் கேட்கப்படும் முக்கிய வினாக்களுக்கு சிறப்பாக பதில் எழுதும் முறை, முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டிய பாடங்கள், முழு மதிப்பெண் பெறுவதற்கான வழிமுறை, பாடங்களை திட்டமிட்டு படித்தல், தேர்வறையில் பின்பற்ற வேண்டிய நேர அட்டவணை, படித்ததை மறக்காமல் இருக்க நினைவுத்திறனை அதிகரித்தல் குறித்து ஆலோசனை தரப்படும். பொதுத்தேர்வு பற்றி மாணவ, மாணவியரின் சந்தேகங்களுக்கு, கல்வி வல்லுனர்கள், இந்நிகழ்ச்சியில் விளக்கம் தருகின்றனர். தேர்வு நேரத்தில் உடல் ஆரோக்கியம் காப்பது குறித்தும், அறிவுரை வழங்கப்படும். திருப்பூர் தாராபுரம் ரோடு, வித்யா கார்த்திக் மண்டபத்தில் இன்று துவங்கும் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில், காலை, 9:00 மணிக்கு, 10ம் வகுப்பு தமிழ்வழி மாணவர்களுக்கும்; மதியம், 12:30 மணிக்கு, 10ம் வகுப்பு ஆங்கில வழி மாணவர்களுக்கும் ஆலோசனை வழங்கப்படுகிறது. நாளை நடக்கும் நிகழ்ச்சியில், காலை, 9:00 மணிக்கு பிளஸ் 2 சயின்ஸ் குரூப் மாணவர்களுக்கும், மதியம், 12:30 மணிக்கு, பிளஸ் 2 ஆர்ட்ஸ் குரூப் மாணவர்களுக்கும் ஆலோசனை தரப்படும். தினமலர் நாளிதழுடன், எஸ்.என்.எஸ்., இன்ஸ்டிடியூசன்ஸ், ஆர்.வி.எஸ்., குரூப் கல்வி நிறுவனங்கள், ஸ்ரீசக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், நிகழ்ச்சியை இணைந்து வழங்குகின்றன. மாணவ மாணவியர் மட்டுமின்றி, ஆர்வமுள்ள பெற்றோரும் பங்கேற்கலாம்; அனுமதி இலவசம். மாணவ, மாணவியர், பள்ளி சீருடையில் வருவது அவசியம். நிகழ்ச்சிக்கு வரும் அனைவருக்கும், புளூ பிரின்ட் புத்தகம் இலவசமாக வழங்கப்படும். பொதுத்தேர்வில், 100க்கு, 100 மதிப்பெண் எடுக்க ஆலோசனை தரும், இந்த அரிய நிகழ்ச்சியை, மாணவ, மாணவியரே மிஸ் பண்ணிடாதீங்க!