உள்ளூர் செய்திகள்

மாணவர் சேர்க்கை பதிவு; மருத்துவ பல்கலை.,க்கு உத்தரவு

சென்னை: தனியார் பல் மருத்துவ கல்லுாரிகளில், எம்.டி.எஸ்., பட்ட மேற்படிப்பை முடிக்கும் நிலையில் உள்ள மாணவர்களின் சேர்க்கையை பதிவு செய்ய வேண்டும் என, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில், எம்.டி.எஸ்., படிப்பில் சேர, பொதுப் பிரிவினர், 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என, 2007ல், அரசு, புதிய விதிமுறையை வகுத்தது; எனினும் இந்த விதிமுறை பின்பற்றப்படவில்லை. இந்நிலையில், 2014 ஏப்ரல் 27ல், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், 2007ம் ஆண்டின் விதிமுறைப்படி, 50 சதவீதத்துக்கும் குறைவாக மதிப்பெண்கள் பெற்று, 2013 - 14ம் கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கையை பதிவு செய்ய முடியாது என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து, நான்கு தனியார் பல் மருத்துவ கல்லுாரிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன. அக்கல்லுாரிகள் தாக்கல் செய்த மனுவில் கோரியிருப்பதாவது:மாணவர் சேர்க்கை தொடர்பான விதிமுறை, 2007ல் பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் இதுவரை அமல்படுத்தவில்லை. எங்கள் கல்லுாரிகளில், 50 சதவீதத்துக்கும் குறைவாக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களைச் சேர்த்துள்ளோம்; அந்த மாணவர்கள், மூன்றாண்டு படிப்பை முடிக்கும் தருவாயில் உள்ளனர். பல தனியார் பல் மருத்துவ கல்லுாரிகள், 50 சதவீதத்துக்கும் குறைவாக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களைச் சேர்த்துள்ளன. எனவே, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, 2013 - 14ம் கல்வியாண்டில், கல்லுாரிகளில் சேர்ந்துள்ள மாணவர்களின் சேர்க்கையை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கோரப்பட்டு இருந்தது. இந்த மனுக்கள் விசாரணையில் இருந்த போது, தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மனுக்களை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், பிறப்பித்த உத்தரவு: மாணவர் சேர்க்கை தொடர்பாக, 2007ல் பிறப்பிக்கப்பட்ட விதிமுறையை அமல்படுத்த, மருத்துவ பல்கலை தவறிவிட்டது. அப்போதே அமல்படுத்தியிருந்தால், இக்கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள் பாதிப்புக்கு ஆளாகி இருக்கமாட்டார்கள். எனவே, 2007 விதிமுறை அடிப்படையில், மருத்துவ பல்கலை, 2014ல் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 2013 - 14ம் கல்வியாண்டில், மனுதாரர் கல்லுாரிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் சேர்க்கையை, எட்டு வாரங்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்