பள்ளியில் ’குடி’மகன்கள் அட்டகாசம்’; நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம்
உடுமலை: உடுமலை, சிவசக்தி காலனி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், தொடர்ந்து நிகழும், குடிமகன்களின் அட்டகாசத்துக்கு அரசுத்துறையினர் நடவடிக்கை எடுக்காமல், அலட்சியம் காட்டி வருகின்றனர். உடுமலை, சிவசக்தி காலனியிலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், ஐம்பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். பள்ளியின் சுற்றுப்பகுதியிலுள்ளவர்கள் விடுமுறை நாட்களில் பள்ளி வளாகத்தில் நுழைந்து விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இரவு பாதுகாவலர் இல்லாததால் நாளடைவில் விளையாடுவதோடு இல்லாமல், சூதாட்டம் விளையாடுவது, மது அருந்துவது போன்ற விதிமீறல்களும் அரங்கேறுகின்றன. காலையில் பள்ளி வளாகத்தில் நுழைந்தவுடனேயே, மது பாட்டில்களை அப்புறப்படுத்துவதே ஆசிரியர்களுக்கும் அப்பள்ளி குழந்தைகளுக்கும் முதல்பணியாக உள்ளது. இதுகுறித்து, சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியிட்ட பின்னர், இப்பிரச்னை நிகழாமல் இருந்துள்ளது. தற்போது மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து நிகழும் இப்பிரச்னையை கல்வித்துறை, ஒன்றிய மற்றும் ஊராட்சி நிர்வாகம், போலீஸ் என அனைத்து துறையினரும் அலட்சியப்படுத்தி, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கண்டுகொள்ளாமல் இருப்பது பெற்றோரிடம் வேதனையை ஏற்படுத்தி வருகிறது. தவிர, பள்ளியின் பொருட்களையும் சேதப்படுத்தி செல்கின்றனர். இதே நிலை தொடர்ந்தால், வகுப்பறை உள்ளிருக்கும் பொருட்களுக்கும் சேதம் ஏற்படுமோ என பள்ளி நிர்வாகத்தினர் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர்.