பள்ளி, கல்லூரி விழா தேர்தல் கமிஷன் தடை
திருப்பூர்: சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு முடியும் வரை, பள்ளி மற்றும் கல்லூரிகளில், ஆண்டு விழா, விளையாட்டு போட்டி உட்பட, எந்தவொரு விழாவும் நடத்தக்கூடாது என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.தமிழக சட்டசபைக்கு, மே, 16ல், ஓட்டுப்பதிவு நடக்கிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. கட்சிகளின் பெயர், சின்னங்கள் இடம் பெற்றுள்ள சுவர் விளம்பரங்கள், பிளக்ஸ் பேனர் உள்ளிட்டவை அகற்றப்பட்டு விட்டன. அரசு நலத்திட்ட உதவி வழங்குதல், மனுக்கள் பெறுதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆண்டு விழா, விளையாட்டு விழா உள்ளிட்ட எந்தவொரு விழாவும் நடத்தக்கூடாது என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, அனைத்து பள்ளிகளுக்கும், சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலர் முருகனிடம் கேட்டபோது, தேர்தல் நன்னடத்தை விதிகளின் அடிப்படையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில், விளையாட்டு போட்டி, ஆண்டு விழா நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷனின் உத்தரவு, சுற்றறிக்கையாக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது, என்றார்.