அரசு பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வருகை
புதுச்சேரி: அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக பாட புத்தகங்கள் நேற்று புதுச்சேரி வந்தது. புதுச்சேரியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு இலவச பாட புத்தகம், நோட்டு, சீருடை, சைக்கிள், ரெயின் கோட் உள்ளிட்ட பொருட்களை வழங்குகிறது. ஜூன் 1ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளி துவங்கும் என அறிவிக்கப்பட்டது. தற்போது வெயில் தாக்கம் அதிகம் நிலவுவதால் பள்ளி துவங்கும் நாட்களை தள்ளி வைக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக, பாட புத்தகங்கள் புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடலுாரில் உள்ள தமிழ்நாடு பாடநுால் கழக டெப்போவில் இருந்து புதுச்சேரிக்கு பாட புத்தகங்கள் கொண்டு வரப்பட்டன. 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான பாட புத்தகங்கள், முருங்கப்பாக்கம் ஆரம்ப பள்ளி கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ளன. ஓரிரு நாட்களில் 10ம் வகுப்பு மற்றும் சி.பி.எஸ்.சி., பாட புத்தகங்கள் கொண்டு வந்தபின்பு, அந்தந்த பள்ளிகளுக்கு பாட புத்தகம் வினியோகம் செய்யும் பணி துவக்கப்பட உள்ளது.