உள்ளூர் செய்திகள்

மருத்துவ நுழைவுத் தேர்வு; முயற்சியை கைவிட வேண்டும்

புதுச்சேரி: மருத்துவ நுழைவுத்தேர்வு கொண்டு வரும் முயற்சியை, மத்திய பா.ஜ., அரசு உடனடியாக கைவிட வேண்டும் என, புதுச்சேரி காங்., கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து, புதுச்சேரி காங்., எம்.எல்.ஏ., வைத்திலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில் பள்ளிக்கல்வி மாநில அரசின் கீழ் வருவதால், அந்தந்த மாநில அரசுகள் தங்கள் மாநில மக்களின் மொழியில், பள்ளிக்கல்வியை வழங்கி வருகிறது. அதே சமயம் மத்திய அரசு, சி.பி.எஸ்.இ., மூலம் பள்ளிக் கல்வியை வழங்கி வருகிறது. இதில் உள்ள பாடங்கள் சராசரி மாணவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். இந்நிலையில், மத்திய பா.ஜ., அரசு, சுப்ரீம் கோர்ட் மூலம் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது நுழைவுத்தேர்வை கொண்டுவர முயற்சிக்கிறது. இந்த தேர்வில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே எளிதில் தேர்ச்சி பெற முடியும். புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களின் பாடத்திட்டத்தில் பயிலும் ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவாகிவிடும். இதனை கருத்தில் கொண்டு, கடந்த காங்., ஆட்சியில் புதுச்சேரியில் மருத்துவ படிப்பிற்கான பொது நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால், புதுச்சேரியில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மருத்துவர்களாக உருவாகி வருகின்றனர். இந்நிலையில், மருத்துவ சேர்க்கைக்கு நுழைவு தேர்வை கொண்டுவரும் முயற்சியை உடனடியாக பா.ஜ., அரசு கைவிட வேண்டும்.பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப் பெண் அடிப்படையிலேயே மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர வழிகாண வேண்டும். இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் காங்., தலைவி சோனியா, ராகுல் ஆகியோர் வழிகாட்டுதலில், புதுச்சேரியில் புதியதாக அமைய உள்ள காங்., அரசு எடுக்கும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்