உள்ளூர் செய்திகள்

இணைவிப்பு கோரி கல்லூரி வழக்கு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி குடும்பத்திற்கு சொந்தமான தயா பொறியியல் கல்லுாரிக்கு, அண்ணா பல்கலை இணைவிப்பு வழங்க உத்தரவிடக் கோரிய மனுவை வாபஸ் பெற்றதால், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. தயா கல்லுாரியின் அங்கீகாரம் பெற்ற அலுவலர் ஜெயகரண் கிரப் தாக்கல் செய்த மனு அழகிரி கல்வி அறக்கட்டளை சார்பில், 2011ல் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில், தயா பொறியியல் கல்லுாரி அமைக்கப்பட்டது. 2011-12 ல் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அனுமதி அளித்தது. அதனடிப்படையில் இணைவிப்பு கோரி அண்ணா பல்கலைக்கு மனு அளித்தோம்; நிராகரித்தது. உச்சநீதிமன்றம், 2014-15 கல்வியாண்டு கவுன்சிலிங் பட்டியலில் கல்லுாரியைச் சேர்த்து, மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்க வேண்டும், என உத்தரவிட்டது. அதை ஏற்று, பல்கலை செயல்படுத்தியது. 2016ல் அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிட்ட, இணைவிப்பு பெற்ற கல்லுாரிகள் பட்டியலில் எங்கள் கல்லுாரியின் பெயர் இடம்பெறவில்லை. அண்ணா பல்கலை இணையதளம் மற்றும் தகவல் கையேட்டில், எங்கள் கல்லுாரி பெயரை சேர்க்க வேண்டும். 2016-17க்கு தற்காலிக இணைவிப்பு பெற்ற பொறியியல் கல்லுாரிகளின் பட்டியலில், எங்கள் கல்லுாரி பெயரை சேர்க்க அண்ணா பல்கலைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, ஜெயகரண் கிரப் மனு செய்திருந்தார். நீதிபதி எம்.வேணுகோபால் விசாரித்தார். அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், அண்ணா பல்கலை வழக்கறிஞர் ராஜராஜன், &'கட்டட உறுதிச் சான்றை, கல்லுாரி நிர்வாகம் சமர்ப்பிக்கவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், தற்காலிக இணைவிப்பு வழங்க இயலாது என பல்கலை உத்தரவிட்டுள்ளது, என்றனர். நீதிபதி, பல்கலையின் உத்தரவை எதிர்த்து, மனுதாரர் தனி ரிட் மனு தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம், என்றார். மனுதாரர் வழக்கறிஞர், மனுவை வாபஸ் பெற்றதால், நீதிபதி தள்ளுபடி செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்