தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மூலம் பி.இ., அட்மிஷன்
பொறியியல் கவுன்சிலிங் தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட பிறகு, நிருபர்களுக்கு பேட்டியளித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது: பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களில் 30 பேருக்கான தரவரிசையை நிர்ணயிக்க ‘ரேண்டம்’ எண் பயன்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்ட கவுன்சிலிங்கிற்கு 60 ஆயிரம் மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 12 நாட்கள் குறைவாக கவுன்சிலிங் நடக்கவுள்ளது. கடந்த ஆண்டு கவுன்சிலிங்கின்போது, ஒரு நாளைக்கு ஆறு செஷன்கள் நடத்தப்பட்டன. தற்போது அது எட்டு செஷன்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பு ஒரு நாளைக்கு 2,000 பேர் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டனர். இப்போது ஒரு நாளைக்கு 3,200 பேர் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட உள்ளனர். கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும், விருப்பமுள்ள மாணவர்கள் வங்கி மூலமாகவும் கல்விக் கட்டணத்தைச் செலுத்தலாம். அடுத்த ஆண்டு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அண்ணா பல்கலைக்கழக உதவியுடன் பொறியியல் கவுன்சிலிங் நடத்தும். தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபிலுடன் மீண்டும் ஆலோசனை நடத்த இருக்கிறேன். தமிழ்நாடு மாநில தொழில்நுட்ப கல்வி கவுன்சில் இந்த ஆண்டு அமைக்கப்படும். அரசு குழு ஆய்வு நடத்த சென்றபோது ஆட்கள் இல்லாதது குறித்து, பனிமலர் பொறியியல் கல்லூரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அரசு 1,000 விரிவுரையாளர்களை நியமிக்கும் போது, மாநிலக் கல்லூரி, ராணிமேரி கல்லூரி உள்ளிட்ட ஐந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 350 காலிப் பணியிடங்களும் நிரப்பப்படும்.