‘இந்திய மாணவர்களுக்கு பாதுகாப்பு’: ஆஸி., பிரதமர் உறுதி
ஆஸ்திரேலியாவில், 93 ஆயிரம் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள் மீது அடிக்கடி இனவெறி தாக்குதல் நடக்கிறது. இதற்கு பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட தலைவர்கள் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளனர். எனினும், இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்கதையாக உள்ளது. இதுகுறித்து, விசாரிப்பதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா ஐந்து நாள் பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். நியூ சவுத் வேல்ஸ் மாநில முதல்வர் நாதன் ரீசை சந்தித்து பேசினார் கிருஷ்ணா. இந்திய மாணவர்களை பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக நாதன் ரீஸ், கிருஷ்ணாவிடம் உறுதியளித்தார். மேலும், குயுன்ஸ்லாந்தில் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட்டை இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா சந்தித்து பேசியபோது, ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது, ‘ஆஸ்திரேலியாவில் கல்வி கற்க வரும் இந்திய மாணவர்கள் பாதுகாக்கப்படுவார்கள்’ என்று கெவின் ரூட் உறுதியளித்துள்ளார். இதற்கிடையே, இந்திய மாணவர்கள் பலர், கிருஷ்ணாவை சந்தித்து, சில கல்லூரிகள் திடீரென மூடப்படுவதால், பாதிக்கப்படும் மாணவர்களுக்கு உதவுவதற்காக அவசர கால நிதி ஒன்றை உருவாக்கும்படி வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து, கிருஷ்ணா குறிப்பிடுகையில், ‘ஆஸ்திரேலியாவில் உள்ள கல்லூரிகளின் மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களை நம்பி சில மாணவர்கள் ஆஸ்திரேலியா சென்று அவதிப்படுகின்றனர். ஆஸ்திரேலியாவில் உள்ள கல்லூரி குறித்து, தூதரகங்கள் சான்றளித்தால் தான் மாணவர்கள் அந்த கல்லூரியில் சேர வேண்டும். அதுமட்டுமல்லாது, சம்பந்தப்பட்ட கல்லூரிகள் என்னென்ன வாக்குறுதி அளித்தது என்பதை மாணவர்கள் தெரிவிக்க வேண்டும். அப்போது, நாங்கள் சரியான நடவடிக்கை எடுக்க முடியும்’ என்றார். இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதால், அது பற்றி அதிக கவனம் செலுத்துவதற்கு வசதியாக இந்திய வம்சா வழியை சேர்ந்த பீட்டர் வர்கீஸ், இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில், இந்தியா வர உள்ள பீட்டர் வர்கீஸ் கூறியதாவது:இந்திய மாணவர்கள் தாக்கப்படும் விஷயத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டியுள்ளது. இந்த பிரச்னைக்கு என்னால் முடிந்த வரை தீர்வு காண பாடுபடுவேன். என்னை பொறுத்தவரை ஆஸ்திரேலியா இனவெறி கொண்ட நாடல்ல. 30 ஆண்டுகளுக்கு முன் இந்த நிலை இருந்திருக்கலாம். ஆனால், தற்போது பலதரப்பட்ட இன, மொழி, கலாசார மக்களை ஆஸ்திரேலியா ஏற்றுக்கொண்டு விட்டது. அனைத்து தரப்பு மக்களை ஒன்றாக பார்க்கும் நிலையில் உள்ளது. இந்திய மாணவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலில் கிரிமினல்கள் தான் அதிகம் சம்பந்தப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில், இனவெறியர்கள் சம்பந்தப்படவில்லை, என முற்றிலும் மறுக்க முடியாது. இந்திய மாணவர்கள் ஒன்றாக செல்லும் போது இந்தியில் பேசிக்கொள்ளக் கூடாது, என போலீசார் எச்சரித்துள்ளனர். இந்த அறிவுரையை முற்றிலும் பின்பற்றாவிட்டாலும், நிலைமைக்கு ஏற்ப இந்திய மாணவர்கள் உஷாராக நடந்து கொள்வது அவசியம். இவ்வாறு பீட்டர் வர்கீஸ் கூறினார்.