உள்ளூர் செய்திகள்

‘பள்ளி விடுமுறை வேண்டாம்’: இந்திய மருத்துவ சங்கம்

மெக்சிகோவில் தொடங்கிய பன்றிக் காய்ச்சல், தற்போது இந்தியாவில் பரவத் துவங்கியுள்ளது. ஆக. 12ம் தேதி வரை 17 பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர். இதுகுறித்து இந்திய மருத்துவ சங்க செயலர் டாக்டர் தரம் பிரகாஷ் கூறியதாவது: ஒரு பள்ளியில் படிக்கும் மாணவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால், அதற்காக ஒட்டுமொத்த பள்ளிக்கும் விடுமுறை விடவேண்டும் என்ற அவசியமில்லை. உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டும் விடுப்பு கொடுத்து ஓய்வு எடுத்துக் கொள்ள சொல்லலாம். நோய் பாதித்தவர்கள், முடிந்தவரை மற்றவர்களுக்கு பரப்பாமல் இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம். 30க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நோயின் பாதிப்பு இருக்குமேயானால், பள்ளிக்கு விடுமுறை விடலாம். இவ்வாறு தரம் பிரகாஷ் கூறினார். இந்திய மருத்துவ சங்கத்தின் துணைத்தலைவர் டாக்டர் அஜய்கம்பீர் கூறியதாவது:பொதுமக்கள் அனைவரும் முகக் கவசங்களை அணிந்து கொள்ள வேண்டியது கட்டாயமில்லை. நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றவர்களுக்கு நோய்க்கிருமிகளை பரப்பாமல் இருக்கும் வகையில், முகக் கவசங்களை அணிந்து கொள்ள வேண்டும். இதில் ஒரு வகை, ‘என்-95’ என்ற முகக் கவசம் மருத்துவ ஊழியர்களுக்கு பயன்படுவது. அது 24 மணி நேரத்திற்கு மட்டும் பயன்படுத்தலாம். மற்றது ஆபரேஷன் தியேட்டர்களுக்கு பயன்படுத்தப்படும் முகக் கவசம். இது அதிகபட்சமாக  ஆறு மணி நேரத்திற்கு மட்டுமே பயன்படும். பொதுமக்கள் வழக்கமாக பயன்படுத்தும் கைக்குட்டையை பயன்படுத்தலாம். ஆனால், அதை இரண்டு மணி நேரத்திற்கு மட்டுமே பயன்படுத்தலாம், புதிதாக வேறு கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும். ஆனால், அடிக்கடி சோப் கொண்டு கைகழுவுவது நல்லது. சாதாரண இன்புளூயன்சாவில் இருந்து இந்த நோயை ஒரே நாளில் வேறுபடுத்தி கண்டுபிடிக்க முடியாது. அதன் தன்மைகளை ஆராய்ந்து இரண்டு நாளில்  கண்டறியலாம். இவ்வாறு அஜய் கம்பீர் கூறினார். இதற்கிடையே போலியான, ‘டாமி ப்ளூ’ மாத்திரைகளின் விற்பனை  மற்றும் முகக் கவசங்கள் கிடைப்பதில் உள்ள சிரமங்களை கண்டறிய மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்