கடல்சார் பயிற்சியில் சேர ஏழு வாலிபர்களுக்கு ஆணை
சென்னை: குழந்தை பராமரிப்பு இல்லங்களில் தங்கி படித்த, ஏழு இளைஞர்களுக்கு, கடல்சார் பயிற்சியில் சேருவதற்கான சேர்க்கை ஆணையையும், பயிற்சி முடித்த பின், தனியார் கப்பல் நிறுவனங்களில் பணியில் சேருவதற்கான, பணி உறுதி ஆணைகளையும், முதல்வர் இ.பி.எஸ்., நேற்று தலைமை செயலகத்தில் வழங்கினார்.சமூக பாதுகாப்பு துறையின் கீழ், அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின், குழந்தை பராமரிப்பு இல்லங்கள் செயல்படுகின்றன. இவற்றிலும், வீடு திரும்பிய மற்றும் பிற்காப்பு நிறுவனங்களில் தங்கியும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற ராஜசேகர், கார்த்திக், சக்திவேல், சரத், வின்சென்ட் வில்லியராஜா, கார்த்திக், கிருஷ்ணன் ஆகிய ஏழு பேரும், கடல்சார் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.ஆறு மாத பயிற்சி வகுப்பில், அவர்கள் சேருவதற்கான ஆணையையும், பயிற்சி முடித்த பின், தனியார் கப்பல் நிறுவனங்களில் சேருவதற்கான, பணி உறுதி ஆணையையும், முதல்வர் நேற்று வழங்கினார்.இம்மாணவர்களுக்கான பயிற்சி கட்டணத்தில், நிறுவனங்கள் அளித்துள்ள கட்டண சலுகை போக, மீதமுள்ள பயிற்சி கட்டணமான, 7 லட்சம் ரூபாய், தமிழ்நாடு இளைஞர் நீதி நிதியில் இருந்து வழங்கப்படும். சேர்க்கை ஆணை வழங்கிய நிகழ்ச்சியில், அமைச்சர் சரோஜா, சமூக நலத்துறை செயலர் மதுமதி, சமூக பாதுகாப்புத் துறை ஆணையர் லால்வேனா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.