கவர்னர் மாளிகை முற்றுகை மாணவர்கள் மீது தடியடி
புதுச்சேரி: புதுச்சேரி கவர்னர் மாளிகையை மாணவர் காங்., தலைமையில் முற்றுகையிட்ட பள்ளி மாணவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.மருத்துவ கல்வியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்து, அதற்கான கோப்பை கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பியது. இடஒதுக்கீடு விவகாரம் என்பதால், உள்துறையின் அனுமதிக்கு இந்த கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவ படிப்பில், 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க கவர்னர் மறுப்பதாக கூறி, மாணவர் காங்., சார்பில். கடந்த இரு நாட்களுக்கு முன், ஒதியஞ்சாலை ஆரம்ப சுகாதார நிலையம் முன் உண்ணாவிரத போராட்டம் துவங்கியது.மூன்றாம் நாளான நேற்று, மாணவர் காங்., தலைவர் கல்யாணசுந்தரம், ஜீவானந்தம் மற்றும் சிலர் அரசு பள்ளி மாணவர்களை அழைத்து சென்று, திடீரென கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். அவர்களை, போலீசார் தடுத்தனர். தடுப்புகளை மீறி, மாணவர்கள் கவர்னர் மாளிகை முன் அமர்ந்து போராட்டம் செய்தனர். அப்போது, போலீசாருக்கும், மாணவர் காங்., நிர்வாகிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடன் போலீசார், மாணவர் காங்., தலைவர் கல்யாணசுந்தரத்தை கைது செய்து அழைத்து சென்றனர்.அப்போது, போலீஸ் வாகனத்தை வழிமறித்து மாணவர் காங்., மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால், கவர்னர் மாளிகை முன் பரபரப்பு ஏற்பட்டது.