சீர்மிகு சட்டப் பள்ளியில் படித்தவருக்கும் உதவி தொகை
சென்னை: சீர்மிகு சட்டப் பள்ளியில் படித்து, வழக்கறிஞராக பதிவு செய்தவர்களுக்கும், 3,000 ரூபாய் உதவித் தொகையை நீட்டிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அரசு சட்டக் கல்லுாரி களில் படித்து, தேர்ச்சி பெறும் வழக்கறிஞர்களுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு மாதம், 3,000 ரூபாய் உதவி தொகை வழங்குவதற்கான உத்தரவு, 2020ம் ஆண்டு ஜூனில் பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவின்படி, அரசு சட்டக் கல்லுாரிகளில் படித்தவர் களுக்கு மட்டுமே, உதவி தொகை வழங்கப்படுவதாகவும், சீர்மிகு சட்டப் பள்ளியில் படித்தவர்களுக்கு வழங்கப்படுவதில்லை எனவும், உதவித்தொகை கோரி, இணையதளத்தில் விண்ணப்பிக்க வசதி செய்யவில்லை என்றும், வழக்கறிஞர் கற்பகம் என்பவர் மனு தாக்கல் செய்தார்.இம்மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு பிறப்பித்த உத்தரவு:சீர்மிகு சட்டப் பள்ளியும், அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது; அரசு நிர்வகிக்கிறது; நிதி உதவி அளிக்கிறது. உதவித் தொகை பெறுவதில் இருந்து, சீர்மிகு சட்டப் பள்ளியில் படித்தவர்களை விலக்கக் கூடாது.எனவே, மற்ற நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில், சீர்மிகு சட்டப் பள்ளியில் முடித்து, வழக்கறிஞர்களாக பதிவு செய்தவர்களுக்கும், உதவித் தொகை வழங்குவதை நீட்டிக்க வேண்டும். இவ்வாறு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.