உள்ளூர் செய்திகள்

சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு இலவச சீருடை, சலுகைகள்?

குழந்தைத் தொழிலாளர் நிலையை அகற்றுவது குறித்து, தலைமைச் செயலர் ஸ்ரீபதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. இதில், குழந்தைத் தொழிலாளர் மறுவாழ்வு மற்றும் நலத் திட்டங்கள், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு கல்வி அளிப்பது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க 17 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் கீழ், பணியில் இருந்து மீட்கப்பட்ட 17 ஆயிரத்து 259 குழந்தைத் தொழிலாளர்கள் படித்து வரும் 451 சிறப்புப் பள்ளிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளி குழந்தைகளுக்கு, தமிழக அரசு மூலம் இலவச சீருடைகள், மருத்துவ பரிசோதனை, பஸ் சலுகை மற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியத்துடன் 500 ரூபாய் உயர்த்தி வழங்குதல் உட்பட பல்வேறு சலுகைகள் வழங்குவது பற்றி விவாதிக்கப்பட்டது.   தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் பருத்தி சம்பந்தப்பட்ட தொழில்களில் குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுத்து மறுவாழ்வு அளிக்க, யுனிசெப் நிறுவனத்தின் உதவியுடன் சிறப்புத் திட்டத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நடத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது. இடம்பெயர்ந்து செல்லும் அல்லது வெளி மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.   இக்கூட்டத்தில், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்புப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உருவாக்கிய ஓவியங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. கூட்டத்தில், தொழிலாளர் துறைச் செயலர் பிரபாகர் ராவ் மற்றும் இதர துறைகளின் முதன்மைச் செயலர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்