மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் புதிய உத்தரவு
கோவை: விடுமுறை விண்ணப்பம் சமர்ப்பிக்காமல் பள்ளி வேளையில் சொந்த வேலை பார்க்கும் தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட பள்ளிக் கல்வித் துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பெரும்பாலான ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் உண்மையாகவும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணிபுரிகின்றனர். ஆனால் சில தலைமை ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வருவதில்லை. விடுப்பு எடுத்தால் அது குறித்து தெரிவிப்பதில்லை. ஆசிரியர் விடுப்பு எடுத்தால், விடுப்புக்கான விண்ணப்பத்தை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் தலைமை ஆசிரியர் விடுப்பு எடுத்தால் யாருக்கும் தெரிவிக்க வேண்டியதில்லை. விடுமுறை எடுக்கும் நாளுக்கான விண்ணப்பத்தை அன்றைய தேதியிட்டு பள்ளியில் பராமரிக்க வேண்டும். ஆனால் பணி நேரத்தில் சொந்த வேலையாக வெளியில் செல்லும் சில தலைமை ஆசிரியர்கள், விடுமுறை விண்ணப்பத்தை எழுதி அலுவலகத்தில் தயாராக வைத்து விட்டு சென்று விடுகின்றனர். மாலையோ மறுநாளோ மீண்டும் பள்ளிக்கு வந்து, கல்வி அலுவலர்கள் எவரும் ஆய்வுக்கு வரவில்லை என்பதை உறுதி செய்து கொள்கின்றனர். ஏற்கனவே எழுதி வைத்திருந்த விடுமுறை விண்ணப்பத்தை கிழித்து போட்டு வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுக் கொள்கின்றனர். சில தலைமை ஆசிரியர்கள் செய்யும் இது போன்ற செயல்களால் நேர்மையாக பணிபுரியும் தலைமை ஆசிரியர்களின் பெயருக்கும் இழுக்கு ஏற்பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தியின் பார்வைக்கு இது குறித்த புகார் வந்ததையடுத்து, புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார். அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் பொதுவாக பிறப்பித்துள்ள அந்த சுற்றறிக்கையில், ‘தலைமை ஆசிரியர் பிற ஆசிரியர்களுக்கு எடுத்துக் காட்டாக செயல்பட வேண்டும். பள்ளியின் பொறுப்புகளை உதவி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்து விட்டுத்தான் விடுப்பில் செல்ல வேண்டும். தலைமை ஆசிரியர் இல்லாத நேரங்களில் உதவி தலைமை ஆசிரியர் பள்ளியை சிறப்பாக கண்காணிக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் தங்கள் பொறுப்புகளில் இருந்து தவறக் கூடாது. இந்த நடைமுறையை பின்பற்றாவிட்டால், தலைமை ஆசிரியர் மீதும், உதவி தலைமை ஆசிரியர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தலைமை ஆசிரியர்கள் காலை சரியாக 8.30 மணிக்கு பள்ளியில் இருக்க வேண்டும். மாலை 5.45 மணி வரை பள்ளியில் இருந்து பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும்‘ என கூறியுள்ளார். இந்த உத்தரவை தவிர, மறுநாள் விடுமுறை எடுக்க விரும்பும் தலைமை ஆசிரியர்கள், முந்தைய நாளே ‘இ-மெயில்’ மூலம் விடுமுறை விண்ணப்பத்தை முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு அனுப்பி விட வேண்டும் என்றும் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் வலியுறுத்தியுள்ளார். மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை காட்டாமல் ‘டிமிக்கி’ தந்து வந்த சில தலைமை ஆசிரியர்கள், முதன்மை கல்வி அலுவலரின் இந்த கிடுக்கிப்பிடி உத்தரவால் கதிகலங்கிப் போயுள்ளனர்.