பள்ளி வாசலில் சினிமா படப்பிடிப்பு: மக்கள் அதிருப்தி
மாணவர்களும் படிப்பை விட்டு வேடிக்கை பார்க்கும் நிலை ஏற்பட்டது. போக்குவரத்து நிறைந்த பகுதிகளில், சென்னையில் இஷ்டம்போல் படப்பிடிப்பு நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த சில தினங்களுக்கு முன், ஜி.எஸ்.டி., சாலை, கத்திப்பாரா சந்திப்பு பகுதியில் எந்திரன் படப்பிடிப்பு நடந்தது. போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் திண்டாடினர். இந்த நிலையில், கொருக்குப் பேட்டை மீனாம்பாள் நகர், கத்திவாக்கம் சாலையில், மூலக்கொத்தளம் முருகன் என்ற சினிமா படப்பிடிப்பு நடந்தது. ஏற்கெனவே அப்பகுதியில் காக்ரின் பேசின் சாலை, கத்திவாக்கம் நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்துக்கு சரியான வழியின்றி மக்கள் திண்டாடி வருகின்றனர். அப்பகுதியில் படப்பிடிப்பு நடந்ததால் பொதுமக்கள் டூவீலர்களில் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. படப்பிடிப்பு நடந்த இடம், மாநகராட்சி நடுநிலைப் பள்ளியின் வாசல்தான். சண்டைக் காட்சிகள் பதிவு செய்யப்பட்டன. படப்பிடிப்பை பார்ப்பதற்காக மாணவ, மாணவியர் ஆர்வ மிகுதியில் பள்ளியின் மாடிகளில் நின்று கொண்டு வேடிக்கை பார்த்தனர். பள்ளியில், இயல்பான பணிகள் பாதிக்கப்பட்டதோடு, மாணவர்களின் படிப்பும் தடைபட்டது. போக்குவரத்து பாதிக்கும் வகையில், பள்ளியின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிக்கும் வகையில் படப்பிடிப்பு நடந்துள்ளது அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரில் பள்ளி, கல்லூரி, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலகங்கள் நிறைந்துள்ள, சப் - ஜெயில் ரோட்டில், ராமர் சினிமா படப்பிடிப்பு நடந்தது. இதனை வேடிக்கை பார்க்க மக்கள் கூட்டம் கூடியதால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மதிய உணவு இடைவேளையின் போது, வீட்டிற்கு செல்ல முடியாமல் அவதியடைந்தனர். மதிய ஷிப்டிற்கு வந்த கல்லூரி மாணவியர் மற்றும் அவர்களை ஏற்றி வந்த வாகனங்களும் அவ்வழியே செல்ல முடியவில்லை. சினிமா ஷூட்டிங்கிற்கு அனுமதி தரும் அதிகாரிகள் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலக நேரங்களை கருத்தில் கொண்டு அதற்கு தகுந்தாற்போல் அனுமதி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.