கல்வி நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி போட புது சட்டம்!
இது தொடர்பான மசோதா, பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.ராஜ்யசபாவில் உறுப்பினர்களின் துணை கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர் கபில் சிபல் கூறியதாவது:அரசு உதவி பெறும் அல்லது உதவி பெறாத பட்டங்கள், டிப்ளமோக்கள் அல்லது சான்றிதழ்களை வழங்கும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும், தரத்திற்கான அரசின் அங்கீகாரம் பெறுவது கட்டாயமாக்கப்படும். இதுதொடர்பான வரைவு மசோதா விரைவில், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வைக்கப்படும். பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, அது பார்லிமென்டில் அறிமுகப்படுத்தப்படும்.உலகில் உள்ள எந்த கல்வி முறையும் முறைப்படுத்தப்பட்டதாக இல்லை. இந்தியாவில் கல்வித் துறையை முறைப்படுத்துவது குறித்து பரிசீலிக்க இந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களைக் கொண்ட குழு அமைக்கப்படும்.புதிதாக உருவாக்கப்படும் கல்வி முறையானது அரசின் ஆதிக்கம் நிறைந்ததாக இருக்காது. அதற்கு மாறாக வெளிப்படையானதாக இருக்கும். அனைத்து கல்வி நிறுவனங்களும், தங்களின் நிறுவனத்தில் உள்ள துறைகள், வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றை வெப்சைட்டில் வெளியிட வேண்டும்.உயர் கல்வியை மறுசீரமைப்பது தொடர்பான மசோதா, தற்போது விவாத நிலையில் உள்ளது. இந்த மசோதாவும் பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படும். உயர் கல்வி நிறுவனங்கள் தர அங்கீகாரம் பெறுவது தொடர்பாகவும், அது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய மதிப்பீடு குறித்தும் பல்கலைக் கழக மானியக் குழு சில விதிமுறைகளை உருவாக்கியுள்ளது.அவை விரைவில் அமலுக்கு வரும். உயர் கல்வி நிறுவனங்களுக்கு மானியங்களை நிறுத்தி வைப்பது அல்லது தர அங்கீகாரம் பெறும் வகையில், அவைகளை தகுதியற்றதாக அறிவிப்பது போன்ற யோசனைகளும் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளன.புதிதாக உருவாக்கப்பட்டுள்ள விதிமுறைகள் தொடர்பாக தேசிய அங்கீகாரம் மற்றும் மதிப்பீட்டு கவுன்சில் மற்றும் தேசிய அங்கீகார வாரியம் போன்றவற்றுடன் பல்கலைக்கழக மானிய குழு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. அதன் பின், விதிமுறைகள் அறிவிக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் கபில் சிபல் கூறினார்.