உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் விரைவில் இன்டர்நெட் வசதி
இந்தியாவில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தவும், உறுதிப்படுத்தவும் அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) மத்திய அரசால் கடந்த 2001ம் ஆண்டு துவக்கப்பட்டது. இத்திட்டம் அடுத்த ஆண்டு முடிவடையும் என்று கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒன்பது மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி., மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. ஆர்.எம்.எஸ்.ஏ., தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.இதற்காக மத்திய அரசு தமிழகத்துக்கு 151 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம் மூலம் முதல்கட்டமாக ஒன்பது மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி., மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் அடிப்படை பயிற்சி மற்றும் இணையதள பயன்படுத்தும் பயிற்சி ஆகியவை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக முதல்கட்டமாக திருச்சியில் நேற்று அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும், கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.அவர்கள் மூலம் மற்ற ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்பட்டு, பின் மாணவர்களுக்கு அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி மற்றும் இணையதளம் பயன்படுத்தும் முறை பற்றியும் சொல்லித் தரப்படும். மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் மற்றும் இணையதள பயிற்சிகள் அளிக்க வசதியாக அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கான நிதி ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில் இருந்து பெறப்படும். அதன்படி, திருச்சி மாவட்டத்தில் 70 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 59 அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் உள்பட 136 பள்ளிகளில் இணையதள வசதி விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளது.அப்படி இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டு விட்டால் மாவட்ட கல்வித்துறைக்கும், பள்ளிகளுக்கும் இடையேயான நிர்வாக தொடர்புடைய பணிகள் அனைத்தும் இணையதளம் மூலமாகவே நட ந்து விடும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். புதிய திட்டம் மூலம் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு பயிற்சிகள் மட்டுமே அளிக்கப்படும். அவர்களுக்கு வேறு எந்த வசதியும் ஏற்படுத்தி தரப்படமாட்டாது. ஆனால் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் மூலம் அரசு பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள், கட்டமைப்பு வசதிகள் மற்றும் கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் கிடைக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.