கல்லூரி, பல்கலை ஆசிரியர் சங்கம் ஒருங்கிணைப்புக்குழு தீர்மானம்
இதுகுறித்து திருச்சியில் நடந்த கல்லூரி மற்றும் பல்கலை ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கைக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.கல்லூரி மற்றும் பல்கலை ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கைக் குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. இதில் குழுவின் தலைவர் பேராசிரியர் நாகூர் கனி, அமைப்பாளர் கனகதுரை, செயலாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கீழ்கண்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.அரசு அறிவித்த ஐந்து அரசு கல்லூரிகளை உடனடியாக ஒருமைப் பல்கலைகளாக தரம் உயர்த்த வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் 10 லட்சம் பேரிடம் கையெழுத்துப் பெற்று தமிழக முதல்வரிடம் ஒப்படைக்கப்படும்.ஐந்து அரசு கல்லூரிகளை ஒருமைப்பல்கலையாக மாற்றவேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 19ம் தேதி சென்னையில் மாபெரும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். பல்கலை மான்யக்குழு அறிவித்துள்ளபடி அனைத்து கல்லூரி ஆசிரியர்களுக்கும் ஓய்வுபெறும் வயதை 60ஆக உயர்த்த வேண்டும். புதிதாக பணியில் சேர்ந்த பல்கலை, கல்லூரி ஆசிரியர்களுக்கும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.புதிதாக கல்லூரி ஆசிரியர்கள் நியமிக்கும் போது பழைய நடைமுறையே பின்பற்ற வேண்டும். கும்பகோணம் ஆண்கள், பெண்கள் மற்றும் கோவை அரசு கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த ஜுன் மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய தொகுப்பூதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும். கோவையில் நடைபெறும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் பேராசிரியர்கள் பெரும்திரளாக கலந்து கொள்ள வேண்டும். ஒருமைப் பல்கலை அமைய அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஆதரவு கேட்பது என்ற பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.