உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி மாணவர்கள் சாகுபடி செய்த அரிசி!

 கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டம், துறவூர் அடுத்த பட்டணக்காடு கிராம ஊராட்சி பகுதியில், அரசு மேல் நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, தொழில் சார்ந்த கல்வி போதிக்கப்படுகிறது. இப்பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் இணைந்து, விவசாயம் செய்ய முடிவு செய்தனர். இதற்கு, கல்வித் துறை அதிகாரிகளும், பள்ளி தலைமை ஆசிரியரும் ஆதரவுக் கரம் நீட்டினர். மேலும், பிரபல மலையாள மொழி நாளிதழ், கிராம ஊராட்சி, வேளாண் துறை போன்ற பல்வேறு துறைகளும் உதவி செய்தன. பல ஆண்டுகளாக தரிசாக கிடந்த இரண்டரை ஏக்கர் நிலம், விவசாய பணிக்காக தேர்வு செய்யப்பட்டது. மாணவர்களின் கடுமையான உழைப்பால் விளை நிலமாக்கி, அந்நிலத்தில் பொக்காளி ரக நெல் விளைவித்தனர். இதன் மூலம் கிடைத்த 700 கிலோ அரிசியை, கிலோ 14 ரூபாய்க்கு விற்க முடிவு செய்யப்பட்டது. இதையறிந்த மாநில வேளாண்மை துறை அமைச்சர் முல்லக்கரா ரத்னாகரன், அங்கு சென்று மாணவர்களிடமிருந்து, ஐந்து கிலோ அரிசியை விலைக்கு வாங்கினார். மாணவர்களின் கடுமையான உழைப்பு, நெல் சாகுபடி செய்ய 10 ஆயிரம் ரூபாய் செலவு போன்றவற்றை கணக்கில் எடுத்தால், இதில் லாபம் ஏதும் கிடைக்கவில்லை. இருப்பினும் மாணவர்கள், சாகுபடி அரிசியை அதிக விலைக்கு விற்று, லாபம் அடைய விரும்பாமல், வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களுக்கு வழங்க முடிவெடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்