உள்ளூர் செய்திகள்

கல்வித்துறை குழப்பம்: இடமாறுதலுக்கு ஆசிரியர் பட்டியல் தயாரிப்பு

கல்வித் துறையில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நடைமுறைப்படி, பணி நியமனம் நடக்கும் என்று, சில ஆண்டுக்கு முன், அரசு உத்தரவு வெளியானது. இந்த விகிதப்படி, அதிக ஆசிரியர்கள் உள்ள பள்ளியிலிருந்து, மற்றொரு பள்ளிக்கு மாறுதல் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவானது. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, மூன்று ஆண்டுக்கு முன் ஒரு ஆசிரியருக்கு 30 மாணவர்கள், என்ற நடைமுறை படிப்படியாக பின்பற்றப்படும் என, சட்டசபையில் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரும் வரை, ஆசிரியர்கள் உபரி பணியிடங்களை காரணம் காட்டி, இடமாறுதல் செய்யப்பட மாட்டார்கள் என, கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியளித்திருந்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக, எந்த இடமாற்றமும் நடக்கவில்லை. ஆனால், சில நாட்களாக தொடக்க, உதவி தொடக்க மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், பள்ளிகளுக்கு ஆய்வுக்கு செல்லும் போது, 1:40 என்ற விகிதாச்சாரப்படி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளனரா என ஆய்வு செய்கின்றனர். ஆசிரியர்கள் கூடுதலாக இருந்தால், அந்த பள்ளியின் பதிவேட்டில், கூடுதலாக உள்ள ஆசிரியர் விவரம் குறித்து, குறிப்பெழுதி வருகின்றனர்.   இதனால், இடமாறுதலுக்கு வருமா என, கூடுதல் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். 2010 மார்ச்சில், உபரி பணியிடங்களில் உள்ள ஆசிரியர்கள், வேறு பள்ளிகளுக்கு நியமிக்கப்பட உள்ளனர் என்ற பேச்சும், கல்வித்துறையில் உள்ளது. அரசு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுகிறதா அல்லது சட்டசபையில் அறிவிக்கப்பட்ட விவரம் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற குழப்பத்தில், ஆசிரியர்கள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்