விடை குறிப்பில் பிழைகள் க்யூட் மாணவர்கள் அதிருப்தி
புதுடில்லி: மத்திய பல்கலைக்கான, க்யூட் நுழைவுத் தேர்வுக்காக வெளியிடப்பட்டுள்ள விடைக்குறிப்புகளில் பிழைகள் இருப்பதாகவும், தேர்வு மதிப்பெண் குறைவை எதிர்த்து விண்ணப்பிக்க ஒரு கேள்விக்கு 200 ரூபாய் கட்டணம் மிக அதிகமாக உள்ளதாகவும் மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பல்கலைகளில் மாணவர்கள் சேருவதற்கான க்யூட் நுழைவுத் தேர்வு சமீபத்தில் நடந்தது. இதற்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுஉள்ளன. பல விடைகளில் பிழைகள் இருப்பதாக மாணவர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுஉள்ளது. இதைத் தவிர, தேர்வில் தாங்கள் எழுதிய கேள்விக்கு தவறான மதிப்பீடு அளிக்கப்பட்டிருந்தால், அதை எதிர்த்து விண்ணப்பிக்க, ஒரு கேள்விக்கு, 200 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதற்கும் மாணவர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.விடைக்குறிப்புகளில் சில அச்சு தவறுகள் உள்ளன. அவை சரிசெய்யப்பட்டு திருத்திய விடைக்குறிப்புகள் அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும். கட்டணம் தொடர்பாக ஆய்வு செய்யப்படும் என யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழுத் தலைவர் ஜகதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.