தொலைபேசியில் விபரம் பகிர வேண்டாம்: ஏ.ஐ.சி.டி.இ., எச்சரிக்கை
சென்னை: தொலைபேசி அழைப்புகளில் கல்லுாரி விபரங்களை பகிர வேண்டாம் என, ஏ.ஐ.சி.டி.இ., எச்சரிக்கை விடுத்து உள்ளது.இன்ஜினியரிங் மற்றும் மேலாண்மை கல்லுாரிகள், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் என்ற, ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற்று செயல்பட வேண்டும். நடப்பு புதிய கல்வி ஆண்டில் இன்ஜினியரிங் சேர்க்கை நடத்தும் கல்லுாரிகளுக்கு, அங்கீகாரம் வழங்கும் பணி நடந்து வருகிறது. அங்கீகாரத்துக்கு விண்ணப்பித்த கல்லுாரிகளில் சிலவற்றுக்கு, மர்ம நபர்கள் தொலைபேசியில் அழைத்து, ஏ.ஐ.சி.டி.இ.,யில் இருந்து பேசுவதாக கூறியுள்ளனர்.மேலும், அங்கீகாரத்துக்கு விண்ணப்பித்த போது குறிப்பிட்ட கல்லுாரி விபரங்களையும், வங்கி கணக்கு விபரம் போன்றவற்றையும் சரிபார்க்க வேண்டியுள்ளதால், அந்த விபரங்களை போனில் தெரிவிக்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, ஏ.ஐ.சி.டி.இ.,க்கு சில கல்லுாரிகள் தகவல் அளித்துள்ளன. இதையடுத்து, அனைத்து கல்லுாரிகளுக்கும், ஏ.ஐ.சி.டி.இ., சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.அதில், கல்லுாரி மாணவர் சேர்க்கை அங்கீகாரம், கல்லுாரியின் வகை மாற்றம் உள்ளிட்டவற்றுக்காக விண்ணப்பித்த கல்லுாரிகளிடம், ஏ.ஐ.சி.டி.இ.,யில் இருந்து, தொலைபேசி வழியாக எந்த தகவலும் பெறப்படவில்லை. எனவே, போலி தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளித்து, கல்லுாரி நிர்வாகத்தினர் தங்கள் விபரங்களை பகிர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.