உள்ளூர் செய்திகள்

ஊழலை தடுக்க கல்வி நிறுவன ஒப்புதலில் மாற்றம்

அகில இந்திய தொழில் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ)யின் புதிய வெப்சைட்டை துவக்கி வைத்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியதாவது: கல்வி நிறுவனங்களுக்கு ஏ.ஐ.சி.டி.இ., ஒப்புதல் வழங்குவதில் ஊழல் நடைபெறுவதாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதனால், ஒப்புதல் வழங்கும் முறைகளில் மாற்றங்களைக் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கோரி பதிவு செய் வதை ஆன்-லைன் முறைக்கு மாற்றவும், புதிய நிறுவனங்களுக்கு தேவையான நிலம் தொடர்பான விதிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில், பணியாற்றும் துறை உறுப்பினர்களுக்கு தனித்தன்மை வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்படும். இதன் மூலம் ஒரு நபர், பல நிறுவனங்களில் பணியாற்றுவது தடுக்கப்படும். அடையாள அட்டையில், குறிப்பிட்ட நபரை பற்றிய அனைத்து விவரங்களும் பயோ மெட்ரிக் என்ற விரல் ரேகை முறையில் பதியப்பட்டிருக்கும். மேலும், கல்வி நிறுவனங்களுக்கு எதிராக மாணவர்கள் தங்களின் புகார்களை பதிவு செய்யும் வகையில், புதிய அமைப்பு முறை ஒன்றும் உருவாக்கப்படும். தொழில் கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் கோரி விண்ணப்பிப்பது இந்த மாதம் முதல், ஆன்-லைன் முறைக்கு மாற்றப்படும். புதிதாக துவக்கப்பட்டுள்ள ஏ.ஐ.சி.டி.இ., வெப்சைட் மூலம், அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஒற்றைச் சாரள முறையில் பரிசீலிக்கப்படும். புதிய முறை அமலுக்கு வந்து விட்டதால், கல்வி நிறுவனங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, அதன் அடிப்படையில் அனுமதி வழங்கும் பழைய முறை முடிவுக்கு வந்து விடும். புதிய முறையில் ஒப்புதல் கோரி கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கும் போது, தங்கள் நிறுவனத்தில் உள்ள வசதிகள், துறை உறுப்பினர்கள், பாட வகுப்புகள் போன்ற விவரங்களை அவர்களே தெரிவிக்க வேண்டும். அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இந்த செயல்பாடுகள் எல்லாமே ஆன்-லைன் மூலமே நடைபெறும். நாளை மறுதினம் முதல் இந்த புதிய முறை அமலுக்கு வருகிறது. குறிப்பிட்ட நிறுவனம் தொடர்பாக மாணவர்களுக்கு ஏதேனும் பிரச்னை எனில், அவர்கள் இந்த வெப்சைட் மூலமாக ஏ.ஐ.சி.டி.இ.,யை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். மேலும், புதிதாக கல்வி நிறுவனங்கள் துவங்குவோர், அதற்கு குறிப்பிட்ட அளவு நிலத்தை கொண்டிருக்க வேண்டும் என, விதிமுறைகள் உள்ளன. அதாவது பெரிய மற்றும் மிகப்பெரிய நகரங்களில் புதிய கல்வி நிறுவனங்களை துவக்குவோர், மூன்று மற்றும் ஐந்து ஏக்கர் நிலங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பது தற்போதைய விதி. இது இனி 2.5 மற்றும் நான்கு ஏக்கர்களாக குறைக்கப்படும். தொழிற்கல்வி பாட வகுப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கும், தேசிய அங்கீகார ஆணையம் (என்.பி.ஏ.,)  இனி ஒரு தன்னாட்சி அமைப்பாக செயல்படும். தற்போது இந்த அமைப்பு ஏ.ஐ.சி.டி.இ.,யின் ஒரு பிரிவாக செயல்படுகிறது. பொறியியல் மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்க்கும் அளவை அதிகரிக்கவும் ஏ.ஐ. சி.டி.இ., முடிவு செய்துள்ளது. இனி, புதிய இன்ஜினியரிங் கல்லூரிகள் 300 மாணவர்கள் வரை சேர்க்கலாம். அதே நேரத்தில், மேலாண்மை நிறுவனங்கள் 120 மாணவர்களை சேர்க்கலாம். தற்போது இந்த அளவு 240 மற்றும் 60 என உள்ளது. அதுமட்டுமின்றி, தற்போதுள்ள பொறியியல் மற்றும் மேலாண்மை நிறுவனங்கள், ஏ.ஐ.சி.டி.இ.,யில் அடுத்த ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். அத்துடன் தங்கள் நிறுவனத்தில் உள்ள வசதிகள் தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.  இந்த நிறுவனங்கள் மீது ஏதாவது புகார்கள் இருந்தால் மட்டுமே, அங்கு நேரடியாக ஆய்வு மேற்கொள்ளப்படும். பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரிகளில்  படிக்கும் மாணவர்களுக்கும் தனி அடையாள அட்டை வழங்கப்படும். அதன்மூலம், தாங்கள் படிக்கும் நிறுவனத்திற்கு எதிரான புகார்களை மாணவர்கள் தெரிவிக்கலாம். அந்த புகார்களை ஏ.ஐ.சி.டி.இ., பரிசீலிக்கும். மாணவர்கள் தெரிவித்த புகார்கள் உண்மையெனில், கல்வி நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபடுவது தெரியவந்தால், முறைகேடுகளை தடுக்க புதிதாக கொண்டுவரப்பட உள்ள சட்டம் மூலமாக, அந்த கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கபில்சிபல் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்