உள்ளூர் செய்திகள்

ஆங்கிலத்தில் பேசும் போலி கவுரவம்: முன்னாள் துணைவேந்தர்

கோவை மாவட்ட தமிழ் பேரவையின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா, கோவை அரசு மகளிர் பி.எட்., கல்லூரியில் நடந்தது. விழாவையொட்டி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பேரவை செயலாளர் கோவை ஞானி பேசியதாவது: கோவை வட்டாரத்தில் பல தமிழ் அமைப்புகள் உள்ளன. அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைக்க மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. தமிழ்ஈழம் சார்ந்த சோக கதைகளை கேட்கும் மாணவர்கள் கூட கண்ணீர் வடிக்கின்றனர். அங்குள்ள தமிழர்களின் பரிதாப நிலை பற்றி தலைவர்களுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ கவலை இல்லை. இது, தமிழுக்கு செய்யும் துரோகம். தமிழை செம்மொழி என்ற முறையில் தொல்காப்பியம், சங்க இலக்கியம் ஆகியவற்றை புதிய முறையில் ஆய்வு செய்ய முயற்சித்து வருகிறோம் என்றார். காந்திகிராம பல்கலை முன்னாள் துணைவேந்தர் மார்க்கண்டன் பேசியதாவது: இன்றைய சூழலில் தமிழ் பேரவைகளால் மட்டுமே தமிழ் மொழியை காத்து, அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முடியும். தமிழ் கலாச்சாரம், பண்புகளை மறக்கச் செய்வதாக இன்றைய கல்வி உள்ளது. தமிழின் ஒவ்வொரு இலக்கியத்தையும் இன்றைய மாணவர்களுக்கு அறிமுகம் செய்து கற்பிக்க யாராவது முன்வர வேண்டும். இன்று அனைவரும் இயற்கையை காக்க வேண்டும் என பேசுகிறோம். தமிழ் மொழியில் மட்டுமே இயற்கையை காக்கும் இலக்கியங்கள் இடம் பெற்றுள்ளன. பள்ளிகளில் பயிற்று மொழியாக தமிழ் இடம் பெற வேண்டும். நல்ல ஆய்வுக்கும், சுயமான சிந்தனைக்கும் இந்த முயற்சி உதவும். இன்று ஆங்கிலத்தில் பேசினால்தான் கவுரவம் என்ற கேவலமான நிலை தமிழகத்தில் உள் ளது. இது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல. இந்த நிலை நம்மை அழித்து விடும். கலாச்சார சீரழிவுக்கு காரணமாகி விடும். இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது பற்றி யாரும் கவலைப்படவில்லை. தமிழ் இனம் அழிந்தால் நாகரிகம், பண்பாடு அழிந்து விடும். இவ்வாறு, மார்க்கண்டன் பேசினார். எழுத்தாளர் நாஞ்சில் நாடன், பேரவை தலைவர் சிவகாமி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்