யு.ஜி., செமஸ்டர் தேர்வு முடிவு வெளியிடுவதில் தாமதம்
மதுரை: மதுரை காமராஜ் பல்கலைக்குட்பட்ட கல்லுாரிகளில் இளங்கலை (யு.ஜி.,) படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பி.ஜி.,(முதுகலை) படிப்புகளில் மாணவர்கள் சேர்வதில் சிக்கல் நிலவுகிறது.இப்பல்கலைக்கு உட்பட்டு 82 அரசு, உதவி பெறும், சுயநிதி கல்லுாரிகள் உள்ளன. இக்கல்லுாரிகளில் அனைத்து யு.ஜி., பாடங்களுக்கும் இறுதி செமஸ்டர் தேர்வு ஏப்ரலில் நடந்தது. இதுவரை அதற்கான முடிவுகள் வெளியாகவில்லை. இதற்கிடையே பெரும்பாலான கல்லுாரிகளில் இக்கல்வியாண்டிற்கான பி.ஜி., மாணவர் சேர்க்கை முடியும் நிலையில் உள்ளது. இதனால் விரும்பிய கல்லுாரிகளில் பி.ஜி., படிப்பில் சேர முடியாத சூழ்நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.பேராசிரியர்கள் கூறியதாவது: ஆறாவது செமஸ்டருக்கான முடிவை ஜூனில் வெளியிட்டிருக்க வேண்டும். இந்தாண்டு விடைத்தாள் திருத்துவதில் தாமதம் ஏற்பட்டது. ஐந்து லட்சம் விடைத்தாள்கள் திருத்த வேண்டிய நிலையில் அதற்கு தேவையான ஆசிரியர்கள் பங்கேற்பு குறைவாக உள்ளதாலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்துவதற்கான மதிப்பூதியம் தாமதமாக வழங்கப்படுவதால் ஆசிரியர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. பல்கலை அங்கீகாரம் பெற்ற தன்னாட்சி கல்லுாரிகள் மட்டும் முடிவு வெளியிட்ட நிலையில், அரசு, உதவிபெறும், சுயநிதி கல்லுாரி மாணவர்கள் பி.ஜி., படிப்புகளில் சேர்வதில் சிக்கல் ஏற்படும் என்றனர்.பல்கலை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் இதே நிலை தான் உள்ளது. ஜூன் 28 வரை தேர்வு இருந்தது. ஜூலையில் தான் விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது. சென்னையில் உயர்கல்வி அமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. அதில் காமராஜ் பல்கலை மட்டுமே ஆக.,7 ல் முடிவுகள் வெளியிடுவதாக உறுதியளித்தது. அக்., வரை பி.ஜி., படிப்புகளுக்கான சேர்க்கை நடக்க வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றார்.