உள்ளூர் செய்திகள்

தமிழ் ஆசிரியர்கள் பிரச்னை முதன்மை செயலரிடம் முறையீடு

பெங்களூரு: தமிழ் ஆசிரியர்கள் பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும்  என்று, கல்வித்துறை முதன்மை செயலரிடம், கர்நாடக தமிழ் பள்ளி மற்றும் கல்லுாரி ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.கர்நாடக தமிழ் பள்ளி மற்றும் கல்லுாரி ஆசிரியர் சங்கத்தினர், கடந்த மே 22ம் தேதி, முதல்வர் சித்தராமையாவை சந்தித்து பேசினர். அப்போது, கர்நாடகத்தில் உள்ள தமிழ் பள்ளி, கல்லுாரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சந்திக்கும் பிரச்னைகளை தீர்த்து வைக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மனு அளித்தனர். அந்த மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி, கர்நாடக கல்வித்துறை முதன்மை செயலர் ரித்திஷ்குமார் சிங்கிற்கு, முதல்வர் அலுவலகம் அனுப்பி வைத்தது. இதற்கான நகல் கர்நாடக தமிழ் பள்ளி, கல்லுாரி ஆசிரியர் சங்க தலைவர் தனஞ்செயனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்நிலையில், கல்வித்துறை முதன்மை செயலர் ரித்திஷ்குமார் சிங்கை, தனஞ்செயன் தலைமையில் சங்கத்தின் துணை தலைவர் சம்பத், செயலர் கார்த்தியாயினி, பொருளாளர் பிரபாகரன், முன்னாள் செயலர் மெர்லின், துணை செயலர் மஞ்சுளா, செயற்குழு உறுப்பினர்கள் சுசீதா, பீனா, நாகசுந்தரி, பியூலா ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர். தமிழ் ஆசிரியர்கள் பிரச்னை, குறிப்பாக தங்கவயல் ஆசிரியர்கள் பிரச்னையை தீர்க்க, நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டனர். இதனை ஏற்றுக்கொண்ட ரித்திஷ்குமார் சிங், அதிகாரிகளிடம் பேசி பிரச்னையை தீர்த்து வைப்பதாக உறுதி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்