போதை பொருள் வேண்டாம்- போலீஸ் ப்ரோ!
கோவை: தமிழகத்தில் முதல் முறையாக கல்லுாரிகளில், போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த போலீஸ் பிரோ திட்டம் துவங்கப்பட்டது.கல்லுாரிகளில் மாணவியர் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, போலீஸ் அக்கா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களின் பிரச்னையை தீர்க்கவும், போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போலீஸ் ப்ரோ என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரியில் நடந்த துவக்க விழாவில், போலீஸ் துணை கமிஷனர் சண்முகம் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் சிவக்குமார் போலீஸ் ப்ரோ லோகோவை, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் வழங்கி, அறிமுகம் செய்து வைத்தார்.விழாவில், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசுகையில், பேராசிரியர்கள், மாணவர்களை கருணை உள்ளத்துடன் கண்டிக்க வேண்டும். கொரியர் மூலமாக எந்த பொருள் வந்தாலும் அதை போலீசார் சேகரிக்க வேண்டும். போதை பொருட்கள் சப்ளை செய்பவர்களை பிடிக்க, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என்றார்.புதிய திட்டம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:மாநகர போலீஸ் நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில், 45 எஸ்.ஐ.,கள் போலீஸ் ப்ரோ திட்டத்தில் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்காக, 85க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. எஸ்.ஐ.,கள், இரு வாரங்களுக்கு ஒரு முறை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லுாரிகளுக்கு சென்று, அங்குள்ள மாணவர்களை சந்தித்து போதை பொருட்கள் தொடர்பாகவும், வேறு ஏதாவது பிரச்னை இருந்தாலும், கேட்டு தீர்வு அளிப்பார்கள். போதை பொருட்கள் பயன்பாடு குறித்து தெரிய வந்தால், உரிய ஆலோசனை வழங்கி மீட்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். இந்த திட்டத்தின் மூலம் போலீசார் மற்றும் மாணவர்கள் இடையே, சகஜமான நிலையை உருவாக்கி, போதை பொருள் விற்பனையை ஒழிக்க முடியும் என்று நம்புகிறோம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.