உள்ளூர் செய்திகள்

திறமையை பயன்படுத்துவோருக்கே வாழ்க்கையில் வெற்றி: ஜக்கி வாசுதேவ்

ரோட்டரி கிளப், மாவட்டம் 2980 சார்பில்  டிரீம்ஸ் மாவட்ட அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கு அவினாசி ரோட்டிலுள்ள கொடிசியா வர்த்தக வளாகத்தில்  துவங்கியது. துவக்க விழாவில், ஈசா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் பேசியதாவது: மனிதனுக்குள் குழப்பம் இருந்தால் மட்டுமே தேடுதல் வரும். மனிதர்கள் இன்னும் முழுமையான அமைதி, சந்தோஷத்தை உணரவில்லை. மனிதன் உருவாக்கிய சிறிய கருவி மொபைல்போன். இதை பயன்படுத்த அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர். மனிதன் பெரிய கருவி. இதை முழுவதுமாக பயன்படுத்துகிறோமா? நம்மை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள ஆராய்ந்து செயல்பட்டால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். சந்தோஷம், துக்கம் இரண்டுமே உள்ளத்தால் உணரப்படுபவை. இவ்வுலகில் போராட வேண்டும் என்ற எண்ணத்தில் ஒருவர் தன்னைத்தானே கோபம், பொறாமை உள்ளிட்ட பல்வேறு கெட்ட குணங்களால் வருத்திக்கொள்கின்றனர்.கெட்ட குணங்களை கொண்டு செயல்படுபவர்கள் மற்றவர்களுக்கும் பாதிப்பை கொடுக்கின்றனர். இது, நல்லதல்ல; மனிதர்கள் அனைவரும் ஒரே அளவு திறமை கொண்டுள்ளனர். அவற்றை சரியான முறையில் பயன்படுத்துவோர் மட்டுமே வெற்றி பெறுகின்றனர். மற்றவர்களோ அத்திறமைகளை பயன்படுத்தாமலேயே வாழ்ந்து, இறந்து விடுகின்றனர். முதலில் மனதிற்குள் என்ன உள்ளது என்பதை அனைவரும் ஆராய வேண்டும். மண்ணிலிருந்து விவசாய உணவுப்பொருள் கிடைக்கிறது. அவற்றை மனிதன் உண்ணும் போது உடலுக்குள் சென்று ஜீரணசக்தியால் அவை மீண்டும் மண்ணுக்கே செல்கிறது. நாடு, குடும்பம், கடவுள் உள்ளிட்ட பெயர்களில் மனிதனை மனிதனே அழித்துக்கொள்ளும் செயல்களை மிருகத்தோடு ஒப்பிட்டு கூறுவது தவறு. அவை கொண்டுள்ள அன்பை மட்டுமே உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.மனிதன் மேற்கொள்ளும் அன்றாட செயல்களில் யோகாவும் இடம் பெற வேண்டும். உடலை சுத்தமாக வைத்துக்கொள்ள சொல்லித் தரும் பெற்றோர்களே மன அழுக்கை போக்க யோகாவை கற்றுத் தரும் காலம் வர வேண்டும். தங்களை தானே உணர்ந்து, நல்ல முறையில் வாழ்க்கை நடத்துவதை அனைத்து மக்களும் கற்றுக்கொண்டால் குருமார்களே உலகில் தேவையில்லை. இவ்வாறு ஜக்கி வாசுதேவ் பேசினார்.ரோட்டரி சேர்மன் சந்திரன் வரவேற்றார். மாநகர போலீஸ் கமிஷனர் சிவனாண்டி, மாவட்ட ரோட்டரி ஆளுனர் கோவிந்தராஜ், கருத்தரங்கு செயலாளர் பாஸ்கரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்