உள்ளூர் செய்திகள்

தொல்லியல் துறை படிப்பிற்கு மாணவர்களிடம் ஆர்வம் அதிகரிப்பு

கீழடி அகழாய்வுக்கு முன் தொல்லியல் துறை படிப்புகளில் சேருவோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. தற்போது இந்த படிப்புக்கு கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. சென்னை பல்கலையில், எம்.ஏ., பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை படிப்பு உள்ளது. இதில் 60 பேர் மட்டுமே சேர முடியும். ஆனால் 180க்கும் மேற்பட்டோர் விண்ணப்பத்துள்ளனர். தமிழக அரசு தொல்லியல் துறையில் முதுநிலை தொல்லியல் பட்டய படிப்பு கற்பிக்கப்படுகிறது. இதில் 40 பேர் சேர முடியும்.ஆனால் 150க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். தஞ்சை தமிழ் பல்கலையில் உள்ள முதுநிலை தொல்லியல் படிப்பில் 40 பேர் சேர முடியும்.இங்கும் 150க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இது தொல்லியல் துறையினரிடம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஒரு இடத்துக்கு மூன்று அல்லது நான்கு பேர் போட்டியிடுகின்றனர். இந்த போட்டியை சமாளிக்க மதிப்பெண்ணுடன் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு நடத்தப்பட்டு தகுதி அடிப்படையில் சேர்க்கை நடக்கிறது.தொல்லியல் துறை வேலை வாய்ப்பு குறித்து பேராசிரியர்கள் கூறிதாவது:தற்போது தொல்லியல் துறையின் மீது மாணவர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது வரவேற்கதக்கது. இருந்தாலும் மிக குறைந்த வேலைவாய்ப்பு மட்டுமே உள்ளது என்பதையும் மாணவர்கள் உணர வேண்டும். சென்னை பல்கலையில் நீண்டகாலமாக தொல்லியல் துறையில் 10க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. தமிழக தொல்லியல் துறையிலும் தற்போது தான் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இந்த படிப்பிற்கு தனியார் துறை வேலைவாய்ப்பும் குறைவு என்பதால், படித்து முடித்ததும் பணி கிடைக்க வாய்ப்பில்லை. அதேசமயம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நிறைய மரபு சின்னங்களும் பழமையான கோவில்களும் உள்ளன.அதனால் ஹிந்து அறநிலைய துறையில் தொல்லியல் படிப்பு முடித்தோருக்கு பணி வழங்கினால் கோயில்களை பழமை மாறாமல் பராமரிக்க இயலும். சுற்றுலா துறையில் பணி வாய்ப்பு வழங்கினால் மரபு சின்னங்கள் குறித்த சரியான தகவல்களை பிற மாநில மக்கள் மற்றும் வெளநாட்டினருக்கு உணர்த்தவும் புத்தகங்கள் எழுதவும் முடியும். பள்ளி கல்லுாரிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு தொல்லியல் படித்தோரை தேர்ந்தெடுத்தால் அகழாய்வுகள் மற்றும் முக்கிய துணை ஆவணங்களின் வாயிலாக மாணவர்களுக்கு வரலாறை கற்பிக்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்