கல்வித் தரத்தை உயர்த்துவதே அரசின் முக்கிய நோக்கமாகும்!
பாலக்காடு: கல்வித் தரத்தை உயர்த்துவதே அரசின் முக்கிய நோக்கமாகும், என, கேரள மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்தார்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய கேரள செயல் திட்டம் வாயிலாக, மூன்று கோடி ரூபாய் செலவில் கட்டிய, புது கட்டடத்தை கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். தரூர் எம்.எல்.ஏ., சுமோத் தலைமை வகித்தார். குழல்மந்தம் வட்டார பஞ்சாயத்து தலைவர் தேவதாஸ், கோட்டாயி பஞ்சாயத்து தலைவர் சதீஷ், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் அபிலாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.கல்வி துறை அமைச்சர் சிவன்குட்டி கூறியதாவது: கல்வித் தரத்தை உயர்த்துவதே அரசின் நோக்கம். குழந்தைகளின் கல்விக்காக, மாநில அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்துவதின் ஒரு பகுதியாக, ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். பாட வகுப்புகளில் பின் தங்கியிருக்கும் மாணவர்களை, சிறப்பு கவனம் செலுத்தி சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். கடந்த, 2021ல் ஆட்சிக்கு வந்த பின், 3,800 கோடி ரூபாய் பள்ளிகளில் அடிப்படை வசதி மற்றும் மேம்பாட்டிற்காக செலவிடப்பட்டுள்ளது.