உள்ளூர் செய்திகள்

இங்கிலாந்து தரச்சான்றிதழ் பெற கோவை பள்ளியில் கண்காட்சி

கோவை: இங்கிலாந்து நாட்டின் பன்னாட்டு தரச்சான்றிதழ் பெறும் திட்டத்தின்படி, ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்கள் கண்காட்சி நடத்தி அசத்தினர். தரமான பள்ளிகளை கண்டறிய பிரிட்டிஷ் கவுன்சில் சார்பில் ‘சர்வதேச பள்ளி விருது’ வழங்கப்படுகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்தில் உள்ள பள்ளிகளிடையே தொடர்பு ஏற்படுத்தவும், தொடர்பில் இணையும் சிறந்த பள்ளிகளின் சாதனைகளை பிரபலப்படுத்தவும் இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது. பள்ளிகள் நடத்தும் பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அங்கீகாரம் முடிவு செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் பள்ளிகள் இணைய எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. மூன்று ஆண்டுகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படும். பள்ளியின் அனைத்து மேம்பாட்டு நடவடிக்கைகளிலும் விருதுக்கான முத்திரையை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அங்கீகாரம் பெறுவதற்கான முயற்சிகளில் அவினாசி ரோட்டில் உள்ள ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளியில் நடந்த கண்காட்சியில், ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பல்வேறு நுணுக்கமான பொருட்களை காட்சியாக வைத்திருந்தனர். எல்.கே.ஜி., குழந்தைகளின் பொங்கல் விழா காட்சியை அனைவரும் ரசித்தனர். விலங்குகளின் உலகம், பாரம்பரிய ஆடைகள்,  மாதிரி விமான நிலையம், தண்ணீர் சேமிப்பு, சுற்றுச்சூழல் மாசு விழிப்புணர்வு, இயற்கை சீற்றங்களில் இருந்து தப்பும் விதம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா துவங்கி வைத்து, மாணவர்களை பாராட்டினார். அவர் பேசுகையில், “மாணவர்கள் என்ன செய்தாலும் சமுதாயத்துக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். தன்னம்பிக்கையை வளர்க்க இது போன்ற கண்காட்சிகள் உதவும்,” என்றார். பள்ளி தாளாளர் மெர்சி உம்மன், முதல்வர் நடராஜன்(பொறுப்பு), ஒருங்கிணைப்பாளர்கள் ஜூலியான, கிறிஸ்டி, முன்னாள் முதல்வர் சத்தியநாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்