அறிவியல் கண்காட்சி ரயில்: சேலம் மக்கள் ஆர்வம்
சேலம்: சேலம் வந்தடைந்த அறிவியல் கண்காட்சி ரயிலை ஏராளாமானோர் ஆர்வமுடன் பார்வையிட்டனர். மூன்று நாட்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ரயிலின் உள்ளே பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 16 பெட்டிகளில் அறிவியல் சம்பந்தமான விளக்க படங்கள் மற்றும் கண்காட்சி பொருட்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாட்டுப்பொங்கல் விடுமுறை தினம் என்பதால், ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் அறிவியல் ரயிலை பார்க்க பல்வேறு ஊர்களில் இருந்தும் சேலத்துக்கு நேற்று வந்தனர். இதனால் காலையில் இருந்தே நீண்ட வரிசை காணப்பட்டது. மாலை வரை கூட்டம் குறையாத நிலையில், ஐந்து மணிக்கு கண்காட்சியை நிறைவு செய்ய வேண்டும் என்பதற்காக, ரயில்வே அதிகாரிகள் நான்கு மணிக்கு மேல் பார்வையாளர்களை அனுமதிக்கவில்லை. மாலை ஐந்து மணி வரை அறிவியல் ரயிலை பார்வையிடலாம் என்ற எண்ணத்தில் வந்த ஏராளமான மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். மாலை ஐந்து மணியளவில் அறிவியல் எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பி சென்றது.