மீண்டும் பூமிக்கு திரும்பியது இஸ்ரோ ராக்கெட்டின் பாகம்
பெங்களூரு: சந்திரயான் - 3 விண்கலத்தை சுமந்து சென்ற எல்.வி.எம்., 3 - எம் 4 என்ற ராக்கெட்டின் ஒரு பகுதி, பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்துள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது. இது வடக்கு பசிபிக் பெருங்கடலில் விழும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.நிலவை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் - 3 விண்கலம், கடந்த ஜூலை, 14ம் தேதி செலுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, எல்.வி.எம்., 3 - எம் 4 ராக்கெட் வாயிலாக இது வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. நிலவின் தென் பகுதியில் பத்திரமாக தரையிறங்கிய விண்கலம், திட்டமிட்டபடி சோதனைகளை மேற்கொண்டது.இந்நிலையில், இந்த ராக்கெட்டின் கிரையோஜெனிக் மேல்பாகம், எவ்வித கட்டுப்பாடு உத்தரவுகள் இல்லாமல் தானாகவே, பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்துள்ளதாக இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் கூறியுள்ளது.இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:சந்திரயான் - 3 விண்கலத்தை செலுத்திய, எல்.வி.எம்., 3 - எம் 4 ராக்கெட்டின் மேற்பகுதி, நேற்று முன்தினம் மதியம் 2:42 மணிக்கு, பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்துள்ளது. இது வடக்கு பசிபிக் பெருங்கடலில் விழும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது நம் நாட்டின் வான் பகுதி வழியாக செல்லாது.விண்கலம் செலுத்தப்பட்ட, 124 நாட்களில், ராக்கெட்டின் முக்கிய பாகம் பூமிக்கு திரும்பிஉள்ளது. விண்வெளி கழிவுகள் ஒருங்கிணைப்புக்கான சர்வதேச விண்வெளி அமைப்புகள் குழுவின் பரிந்துரைபடி, கீழ் புவி வட்டப் பாதையில் உள்ள பாகங்கள், 25 ஆண்டுகள் வரை விண்வெளியில் இருக்கலாம்.அந்த வகையில், இந்த விதியை முழுமையாக பின்பற்றி, ராக்கெட்டின் பாகம் தற்போது பூமிக்கு திரும்புகிறது. மேலும் இந்தக் குழு மற்றும் ஐ.நா., நிர்ணயித்துள்ளபடி, ராக்கெட்டில் உள்ள எரிப்பொருட்களை உள்ளிட்டவற்றை வெளியேற்றி, ராக்கெட் வெடிப்பதை தவிர்க்கும் நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டுஉள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.