அதிகளவில் மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோக்களுக்கு அபராதம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள ஆட்டோக்களில், விதிகளை மீறி, அதிகமான எண்ணிக்கையில் பள்ளி மாணவர்களை ஆபத்தான முறையில் ஏற்றி செல்வதாக காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புகார் சென்றது.இதையடுத்து, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம், காஞ்சிபுரம் பேருந்து நிலையம், ஒலிமுகமதுபேட்டை, கிழக்கு ராஜ வீதி, சங்கரமடம் உள்ளிட்ட இடங்களில் நேற்று திடீர் வாகன தணிக்கை செய்தார். இதில், ஆறு ஆட்டோக்களில் விதிகளை மீறி அதிக எண்ணிக்கையில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்றது தெரிய வந்தது.இதையடுத்து, விதியை மீறிய 6 ஆட்டோ, அதிகபாரம் மற்றும் தார்பாலின் மூடாமல் எம்.சாண்ட் மணல் ஏற்றிச் சென்ற மூன்று வாகன உரிமையாளர்களுக்கும், 1 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். பின், ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.