பேட்டரி ஆட்டோ தயாரித்து கல்லுாரி மாணவர்கள் அசத்தல்
சென்னை: சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு, வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையும் ஒரு காரணமாக இருக்கிறது.அதனால், பேட்டரி வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என, அரசு வலியுறுத்தி வருகிறது. தற்போது, பைக், கார் ஆகிய வாகனங்கள், பேட்டரியில் இயக்கப்படுகின்றன. அதேபோல், பொது போக்குவரத்தில் ஒன்றான டீசல், பெட்ரோல், காஸ் பயன்பாடுடைய ஆட்டோவை போலவே, பேட்டரியில் இயக்கப்படும் ஆட்டோவை, சோழிங்கநல்லுார், செம்மஞ்சேரி செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரி மாணவர்கள் இணைந்து தயாரித்துள்ளனர். பி.இ., எலட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவைச் சேர்ந்த, 3 மற்றும் 4ம் ஆண்டு பயிலும் 24 பேர் இணைந்து, பேட்டரி ஆட்டோவை தயாரித்துஉள்ளனர்.இது குறித்து, இக்குழு சார்பாக மாணவர் செந்தில்வேலன் கூறியதாவது:முதல் முறையாக, பேட்டரியால் இயக்கப்படும் ஆட்டோவை, ஆறு மாதங்களில் தயாரித்துள்ளோம். இதற்கான உதிரி பாகங்களை, டில்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து இறக்குமதி செய்தோம்.மொத்தம், 2.27 லட்சம் ரூபாய் செலவானது. ஓட்டுனருடன் சேர்த்து 5 பேர் பயணிக்க முடியும். பேட்டரி வெப்பம் ஆகாமல் இருக்க தெர்மல் கூல் சிஸ்டம் அமைத்துள்ளோம். தொடர்ந்து 5 மணி நேரம் சார்ஜ் செய்தால், 50 கி.மீ., வேகத்தில், 50 கி.மீ., துாரம் பயணிக்க முடியும். ஆட்டோவின் எடை, 290 கிலோ.தற்போது சோதனை ஓட்டமாக, ஓ.எம்.ஆரில் இருந்து மாணவர்கள், பெற்றோரை கல்லுாரிக்கு அழைத்து வர பயன்படுத்துகிறோம். அடுத்தகட்டமாக, இதே ஆட்டோவில் சோலார் மற்றும் ஒயர்லெஸ் சார்ஜிங் அமைக்க ஆய்வு செய்து வருகிறோம். பேட்டரி ஆட்டோ தயாரிக்க, கல்லுாரி நிர்வாகம், எங்கள் துறை பேராசிரியர் கிரபாகரன் மிகவும் உறுதுணையாக இருந்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.