உள்ளூர் செய்திகள்

கூடுதல் தேர்வு கட்டணம் திரும்ப பெற வாய்ப்பு

சென்னை: இந்த செமஸ்டரில் பழைய தேர்வு கட்டணமே வசூலிக்கப்படும்; கூடுதலாக செலுத்திய கட்டணத்தை மாணவர்கள் கல்லுாரிகளில் வாங்கி கொள்ளலாம் என அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.சென்னையில்அவர் அளித்த பேட்டி:தேர்வு நடத்தும் செலவினங்கள் அதிகரித்துள்ளன. எனவே, அண்ணா பல்கலையில், 10 ஆண்டுகளுக்கு பின் தேர்வு கட்டணம், 50 சதவீதம் உயர்த்தப்பட்டது. இது, முறையான கட்டண உயர்வு தான். இது தொடர்பாக, இந்தாண்டு ஜனவரி மாதமே சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. கடந்த மாதம் அனைத்து கல்லுாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.பல கல்லுாரிகளில், புதிய தேர்வு கட்டணத்தை வசூலித்து விட்டனர். இந்த சூழலில் சில கல்லுாரிகளில் இருந்தும், மாணவர்களிடம் இருந்தும் நேற்று முறையீடு வந்தது. கட்டண உயர்வு குறித்து, உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கேட்டார்.அவருக்கு, நாங்கள் விளக்கம் அளித்தோம். உயர் கல்வி துறையின் கீழ் இயங்கும் அனைத்து பல்கலைகளிலும், ஒரே மாதிரியான தேர்வு கட்டணம் வசூலிக்கும் நடைமுறை வர உள்ளது. இதனால், அண்ணா பல்கலை தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்த செமஸ்டரில் பழைய தேர்வு கட்டணமே வசூலிக்கப்படும். இது தொடர்பாக, அனைத்து கல்லுாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும். எனவே, கூடுதல் கட்டணம் செலுத்திய மாணவர்கள் தங்கள் கல்லுாரியில் அதை திரும்ப பெற்று கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்