பாரம்பரியத்தை பாதுகாக்கணும்: மாணவர்களுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்
மதுரை: மாணவர்கள் நம் பாரம்பரியத்தை அறிந்து கலைச் சொத்துக்களான கோயில்களை பாதுகாக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தினார்.உலக மரபு வாரவிழாவையொட்டி மதுரை தியாகராஜர் கல்லுாரியில் தென்தமிழக குடைவரை கோயில்கள் பற்றிய புகைப்பட கண்காட்சி, கவியரங்க நிகழ்ச்சி துவங்கியது. இதனை துவக்கி வைத்து அவர் பேசியதாவது: நம் முன்னோர்கள் பாரம்பரியத்தை ஓலைச்சுவடி, செப்புத்தகடுகளில் எழுதினால் அழித்து விடுவர், கல்லில் செதுக்கினால் அழிக்க முடியாது என்பதால், கடினமான பாறைகளில் செதுக்கி உள்ளனர்.பெரிய கோயில்களை பராமரிக்கிறோம். சிறிய கோயில்கள் கவனிப்பாரின்றி சிதறிக்கிடக்கின்றன. இந்த கோயில்களுக்கும் தமிழ் இலக்கியம், மொழிக்கும் தொடர்பு உள்ளது. இதில் இருந்து நம் பாரம்பரியத்தை அறியலாம். நம் பாரம்பரியம் தெரிந்தால் உலகம் நம்மை மதிக்கும். எனவே மாணவர்கள் கோயில்களை பாதுகாக்க வேண்டும் என்றார்.முன்னதாக மத்திய தொல்லியல் துறை டைரக்டர் ஜெனரல் கிஷோர்குமார் பாஷா பேசுகையில், இங்கு தடுக்கி விழுந்தாலே பாரம்பரிய சின்னங்கள் ஏராளமாக உள்ளன. அதனால் அதன் அருமை தெரிவதில்லை. ஆனால் வெளிநாடு சென்றால்தான் இங்குள்ள அருமை தெரியும் என்றார்.நிகழ்ச்சியில் கல்லுாரி தலைவர் உமா கண்ணன், செயலாளர் ஹரிதியாகராஜன், மத்திய தொல்லியல் துறை மண்டல இயக்குநர் என்.கே.பட்டாக், திருச்சி மண்டல இயக்குநர் அனில்குமார், தொல்லியல் கல்விநிறுவன இயக்குனர் அருண்ராஜ் உட்பட பலர் பேசினர்.இவ்வளவுதானாஅழைப்பிதழில் அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், கலெக்டர் சங்கீதா ஆகியோர் பெயரும் இடம் பெற்றிருந்தது. நிர்மலா சீதாராமன் பங்கேற்ற இவ்விழாவில் மேற்கூறிய யாரும் பங்கேற்காமல் புறக்கணித்தனர். கீழடி உட்பட தொல்லியல் விஷயங்களில் ஆர்வம் காட்டி, சமூகவலைத் தளங்களில் ஆக்டிவ்வாக செயல்படும் எம்.பி., வெங்கடேசனும் இதில் பங்கேற்கவில்லை.